நிந்தவூர் பிரதேசத்தில் சமூக, கலாச்சார விழுமியங்களை மேம்மபடுத்தும் நோக்கில் முக்கிய கலந்துரையாடலொன்று ஞாயிற்றுக்கிழமை(19) இரவு நிந்தவூர் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் கருத்து தெரிவிக்கையில்,
அண்மைக்காலமாக இப்பிராந்தியத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை, இளவயது மரணங்கள், வீதி விபத்துக்கள் போன்ற சமூக பிரச்சினைகள் சமூகத்தின் எதிர்காலத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக மாறி வருகிறது.
இவ்வாறான சவால்களை தனிப்பட்ட முயற்சிகளால் சமாளிக்க முடியாது, மத நிறுவனங்கள், சமூக அமைப்புகள், பாதுகாப்பு துறை, அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகிய அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.
நிந்தவூர் பிரதேச சபை மற்றும் தொடர்புடைய அனைத்து தரப்பினருடனும் இணைந்து சமூக நலன் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக உள்ளோம்.
இளைஞர்களை தவறான பாதைகளில் இருந்து பாதுகாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சமூக ஒழுக்கத்தை மேம்படுத்தும் திட்டங்கள் மற்றும் பாதுகாப்பான சமூக சூழலை உருவாக்கும் செயற்பாடுகள் விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம்.
இக்கலந்துரையாடல், நிந்தவூர் பிரதேசத்தில் நல்லிணக்கம், ஒழுக்கம் மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்கான முக்கிய தளமாக அமையும் என கூறினார்.
இதன்போது நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் உள்ளிட்ட நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம நிர்வாக உத்தியோகத்தர், நன்னடத்தை உத்தியோகத்தர், நிந்தவூர் உலமா சபையின் நிர்வாகிகள், நிந்தவூர் ஜும்மா பெரிய பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், ஜாமிஊத் தெளஹீத் ஜும்மா பள்ளிவாயல், இஷ்வா ஜும்மா பள்ளிவாயல் மற்றும் தைக்கா பள்ளிவாயல் நிர்வாகிகள், கோவில் நிர்வாகிகள், பிரஜா சக்தி அமைப்பின் தவிசாளர்கள், சக்காத் சபை நிர்வாகிகள், கத்தீப் பேஸ் இமாம் சம்மேளனம், நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணி, மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
நிருபர்
பாறுக் ஷிஹான்

What’s your Reaction?
