ஆலயத்தில் திருப்பணி, புனரமைப்பு, மகா கும்பாபிஷேகம் அல்லது வேறு காரணங்களுக்காக மூலவர் திருமேனியில் நேரடியாக நித்திய பூஜைகளை மேற்கொள்ள இயலாத சூழலில், மூலவரின் தெய்வீக சக்தியை ஆகம முறையின்படி தற்காலிகமாக ஒரு கலசம், யந்திரம் அல்லது வேறு புனித ஸ்தானத்தில் எழுந்தருளச் செய்து வழிபடுவதே பாலஸ்தாபனம் எனப்படுகிறது.
பொதுவாக ஆலயங்களில் கும்பாபிஷேகம் செய்து 12 வருடங்கள் சென்றால் மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது ஆகம விதி.
அதற்கு முன்பதாக செய்யப்படுகின்ற ஒரு ஆகம செயற்பாடு தான் பாலஸ்தாபனம்.
பாலஸ்தாபனம் என்றால் என்ன? என்பது பற்றி பலரும் வினாவினார்கள்.
அதற்கு எமது மூத்த ஊடகவியலாளரும் கல்வியிலாளருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா விளக்கமளிக்கிறார்.
அது பற்றி மேலும் கூறுகையில்..
“பால” என்பது “தற்காலிகம்” என்றும், “ஸ்தாபனம்” என்பது “நிறுவுதல்” என்றும் பொருள்படும். அதாவது, நிரந்தர மூலஸ்தானத்திலிருந்து தற்காலிகமாக தெய்வ சக்தியை வேறொரு இடத்தில் நிறுவி வழிபடுவதாகும்.
பாலஸ்தாபனம் ஏன் செய்யப்படுகிறது? என்றும் கேள்வி எழலாம்.
ஆலயப் புனருத்தாரணப் பணிகள் நடைபெறும்போது,
கருவறை திருத்தம் செய்யும்போது,
புதிய ஆலய நிர்மாணப் பணிகள் இடம்பெறும்போது,
மகா கும்பாபிஷேகத்திற்கு முன்பாக
மூலவர் திருமேனியில் பழுது நீக்கும் பணிகள் செய்யும்போது,
பாலஸ்தாபனத்திற்குப் பின் வழிபாடு
பாலஸ்தாபனம் செய்யப்பட்ட பின்பு, தற்காலிகமாக நிறுவப்பட்ட இடமே மூலஸ்தானமாகக் கருதப்படும்.
ஆகவே
தினசரி பூஜைகள் தொடர வேண்டும்.
காலை, மாலை தீபாராதனைகள் நடைபெற வேண்டும்.
நைவேத்தியம், அர்ச்சனை, அபிஷேகம் ஆகியவை ஆகம விதிப்படி செய்யப்பட வேண்டும்.
பக்தர்கள் பாலஸ்தாபன ஸ்தலத்திலேயே தரிசனம் செய்ய வேண்டும்.
உற்சவங்கள் மற்றும் விசேட பூஜைகளும் அங்கு நடத்தப்படலாம்.
பாலஸ்தாபனம் காலத்தில் கருவறைக்குள் பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
பாலஸ்தாபனம் என்பது வெறும் சடங்கு அல்ல. ஆலயப் பணிகள் நடைபெறும் காலத்திலும் இறைவனின் அருளும், ஆலயத்தின் ஆன்மீகத் தொடர்ச்சியும் இடையூறு இல்லாமல் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஆகம மரபாகும்.
இதனால் ஆலயத்தில் வழிபாடு தடையின்றி தொடர்கிறது.
எனவே, பாலஸ்தாபனம் செய்யப்பட்ட காலத்தில் பக்தர்கள் அதே பக்தியுடனும் மரியாதையுடனும் வழிபட்டு, பின்னர் நடைபெறும் மகா கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
வலம் வரும் முறை பற்றி அறிவோம்..
முதலில் கைகளை கழுவி, மனதை ஒருமுகப்படுத்தி சன்னிதியை வணங்க வேண்டும்.
தேங்காய், பழம், மலர் போன்ற காணிக்கைகளை சமர்ப்பிக்கலாம்.
பின்னர் வலது பக்கமாக (கடிகாரச் சுற்றுத் திசையில்) வலம் வர வேண்டும்.
பொதுவாக 1, 3 அல்லது 5 முறை வலம் வருவது வழக்கமாகும்.
வலம் வரும்போது இறைநாமம், மந்திரம் அல்லது பக்திப் பாடல்களை உச்சரிக்கலாம்.
பாலஸ்தாபனக் கலசம் அல்லது யந்திரம் அமைந்துள்ள இடத்தை மிகுந்த மரியாதையுடன் அணுக வேண்டும்.
ஆலய நிர்வாகம் அல்லது குருமார்கள் குறிப்பிட்டுள்ள பாதையிலேயே வலம் வர வேண்டும்.
சில ஆலயங்களில் திருப்பணிகள் காரணமாக முழு பிரகாரத்தையும் சுற்ற அனுமதி இல்லாமல் இருக்கலாம். அத்தகைய சந்தர்ப்பங்களில் குருக்கள் காட்டும் முறையையே பின்பற்ற வேண்டும்.
கருவறை மூடப்பட்டிருந்தாலும், தெய்வ சக்தி பாலஸ்தாபன ஸ்தலத்தில் இருப்பதாக ஆகமங்கள் கருதுவதால் அங்குள்ள தரிசனமே முழுப் பலனைத் தரும் என நம்பப்படுகிறது.
சிறப்பு குறிப்பு
சைவ மற்றும் சக்தி ஆலயங்களில் ஆகம மரபுகளுக்கு ஏற்ப பாலஸ்தாபன வழிமுறைகளில் சிறிய வேறுபாடுகள் இருக்கலாம்.
எனவே, குறிப்பிட்ட ஆலயத்தின் பிரதம குரு அல்லது சிவாச்சாரியாரின் அறிவுறுத்தலுக்கு முன்னுரிமை அளிப்பதே சிறந்த நடைமுறையாகும்.
பொதுவாக, “பாலஸ்தாபன ஸ்தலமே தற்காலிக மூலஸ்தானம்” என்ற எண்ணத்துடன் பக்தியோடு வலம் வந்து வழிபடுவது ஆகம மரபிற்கு ஏற்றதாகும்.


