உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தியாக தீபத்தின் சிலை அகற்றம் – நினைவுகூரும் உரிமையின் மீதான தாக்குதலா..?

removal of thiyaga deepam statue an attack on the right to remember | Pathivu News
மயூரப்பிரியன்.
“சிலைகள் உடைந்தாலும் தியாகங்கள் உடைவதில்லை” என்பதற்கேற்ப, தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்ட செய்தி உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் ஆழந்த வேதனையையும் எதிர்ப்பையும் உருவாக்கியுள்ளது.
உணவின்றியும் நீரின்றியும் 12 நாட்கள் போராடி தன் உயிரை அர்ப்பணித்த ஒரு தியாகியின் நினைவிடத்தையும் சிலையையும் அகற்றுவது, வரலாற்று அடையாளங்களை அழிக்கும் முயற்சியாகவே கருதப்படுகிறது.
தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகளில் நீங்காத இடம் பிடித்த தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்ட நிகழ்வானது, வெறும் ஒரு கட்டமைப்பை தகர்த்தெறிந்த செயலாக மட்டும் பார்க்கப்பட முடியாது.
தியாக தீபம் திலீபன் ,
1). வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2). சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3). அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
4). ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5). தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.
போன்ற ஐந்தம்ச கோரிக்கைகளை முன் வைத்து 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நல்லூர் ஆலய வீதியில் ஒரு சொட்டு நீராகாரமும் இன்றி உண்ணாநோன்பினை ஆரம்பித்தார்.
அவரது கோரிக்கைகள் எவையும் நிறைவேற்றப்படாததால் 12 நாட்களின் பின்னர் 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி காலை 10.48 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.
அவரது 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இம்முறை அனுஷ்ட்டிக்கபடும் போது , நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவாலயத்தில் தியாக தீபத்தின் திருவுருவ சிலை வைக்கப்பட்டு , 12 நாட்களும் மலர் மாலை அணிவித்து , மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு வந்தது
இறுதிநாள் அஞ்சலி நிகழ்வுகள் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற போது, பெருந்திரளானவர்கள் கூடி மாலை அணிவித்து , மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்
இளைஞன் ஒருவர் தியாக தீபத்தின் நினைவாலயத்திற்கு தூக்கு காவடி எடுத்து வந்து , மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் .
இவ்வாறான நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை , யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான சுமார் 20 பொலிஸார் இரண்டு வாகனங்களில் வருகை தந்து , நினைவாலயத்தில் இருந்து சிலையை அகற்றி , தம்முடன் எடுத்து சென்றனர்
தியாக தீபத்தின் நினைவிடத்தில் இருந்து சிலை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்றைய தினம் தியாக தீபத்தின் நினைவிடத்தில் முன்பாக கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன் பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் ,
தியாக தியாகதீபம் திலீபன் ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினரான பொன் மாஸ்டர் என அழைக்கப்படும் செல்லத்துரை பொன். குணரத்னம் தெரிவிக்கையில்,
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் வருடா வருடம் நாம் எழுச்சி பூர்வமாக கடைப்பிடித்து வருகின்றோம். அந்த வகையில் இம்முறை அந்த எழுச்சியின் ஒரு கட்டமாக சிலை வைக்கப்பட்டு அனைவராலும் வணங்கப்பட்டு வந்த நிலையில் இந்த சிலையானது பொலிஸாரினால் அகற்றப்பட்டுள்ளது.
இந்த செயல்பாட்டை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். நாம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழினமும் ஆங்காங்கே தமது கண்டனங்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
எனவே இந்த சிலை மீள சட்டபூர்வமாக இதில் கொண்டுவந்து வைக்கும் வரை அனைவரும் அணிதிரண்டு செயல்பட வேண்டும் என்பதை அன்ப உரிமையுடன் கேட்டு கொள்கிறேன் என தெரிவித்தார்.
சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள் தனது கண்டனத்தை தெரிவிக்கும் போது,
நல்லூரிலே கடந்த 12 நாட்களாக நாங்கள் நிறுவி வழிபட்ட எங்களுடைய தியாகதீபதின் சிலை அடாவடித்தனமாக அகற்றப்பட்டிருக்கிறது. இதனை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்.
தியாகதீபம் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக ஒரு சொட்டு நீராகாரம் கூட அருந்தாமல் தன்னை வருத்தி, ஊனினை உருக்கி, தன்னுடைய உயிரை உரிமைகளுக்காக, தமிழ் இனத்துக்காக, தமிழின விடுதலைக்காக அர்ப்பணித்த ஒரு பெரிய தியாகி.
அப்படிப்பட்டவர் உடைய ஒரு சிலையை நிறுவி, அந்த நினைவுத்தூபி அமைந்திருக்கக்கூடிய இடத்திலே நாங்கள் வழிபாடு ஆற்றுவதும், நினைவேந்தலை செய்வதும் சர்வதேச சட்டங்களின் பிரகாரம் எங்களுடைய அடிப்படை உரிமை.
அந்த அடிப்படை உரிமையை மீறி பொலிஸார் வந்து சிலையை அடாத்தாக அகற்றி சென்றுள்ளார்கள்.
சிலையை அகற்ற நீதிமன்றத்தின் ஊடாக எந்தவித கட்டளைகளும் பெறப்படவில்லை. நீதிமன்றம் இந்த விடயத்திலே தாங்கள் தலையிடமாட்டோம் என்று அறிவித்ததன் பிற்பாடு, பொலிசார் இவ்வாறு செயல்படுவார்களாக இருந்தால், இங்கே நீதிமன்றங்களுக்கும், நீதிக்கும், சட்டத்திற்கும் எங்கே இடம்?
மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கும் பொழுது, மாநகரசபை எல்லைக்குள்ளே இருக்கக்கூடிய சிலையை அகற்றுவதாக இருந்தால், யாழ்ப்பாணம் மாநகரசபை தான் அகற்றி இருக்க வேண்டும்.
மாநகரசபையை மீறி பொலிசார் இந்த சிலையை அகற்றியது என்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக பிரதிநிதிகளுக்கு எந்தவித அதிகாரமுமோ அல்லது பலமுமோ இல்லை என்பதை வெட்ட வெளிச்சமாக எடுத்துக்காட்டுகிறது.
ஆகவே, அப்படியான செயற்பாடுகள் காலத்துக்கு காலம் தமிழ் மக்களுக்கு எதிராக இவ்வாறு முன்னெடுப்பதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
சர்வதேச சமூகம், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள், சர்வதேச நாடுகள் இந்த அடிப்படை ஜனநாயக உரிமையான நினைவேந்தல் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பதுடன் இலங்கை அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்.
மீண்டும் இதே இடத்திலே தியாகதீபத்தின் சிலை நிறுவப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் அனைவருடைய வேண்டுகோளாக இருக்கிறது.
இதற்காக வடக்கு, கிழக்கு தமிழர் தாயகமெங்கும், புலம்பெயர் தேசங்களிலும், தமிழகத்திலும் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும், கண்டன அறிக்கைகளை வெளியிட வேண்டும், கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதனுடைய ஒரு எழுச்சியாக வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் தழுவிய அளவிலே ஒரு கடுமையான எதிர்ப்பை, எழுச்சியை நாங்கள் ஏற்படுத்த வேண்டும்.
தியாக தீபம் சொன்னது போன்று , ‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும்’ அவரது அந்த கனவை நோக்கி எங்களுடைய பயணம் தொடர வேண்டும் என்றார்.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன்
எங்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு மிகப்பெரும் அநீதிக்கு எதிரான கண்டனத்தை தெரிவிக்கிறோம்.
12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தமிழ் மக்களுடைய உரிமைகளுக்காக உயிர்நீத்த தியாகி திலீபன் என் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், அவருடைய இந்த திருவுருவச் சிலைக்கு மக்கள் மலரஞ்சலி செலுத்தி அஞ்சலித்த நிலையில், பொலிஸார் திருவுருவச் சிலையை அநாகரீகமான முறையில் அகற்றிச் சென்றுள்ளனர்.
ஒருவரை நினைவேந்துவது ஒரு அடிப்படை மனித உரிமை. ஒரு நினைவேந்தல் என்கின்றது எங்களுடைய பண்பாட்டு உரிமையும் கூட. இந்த உரிமைகளை மறுதலித்து வைக்கப்பட்டிருந்த இந்த தியாக தீபத்தின் திருவுருவச் சிலையை இதே இடத்தில் நிறுவ வேண்டும் என்று சொல்லி நாங்கள் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.
தென்னிலங்கையில் இரண்டு தடவைகள் ஆயுதக் கிளர்ச்சியை முன்னெடுத்த ஜே.வி.பி.-யினுடைய தலைவர் ரோஹண விஜேவீரவிற்கு தென்னிலங்கையில் உருவப்படங்களை வைக்கவும், பொது இடங்களில் அஞ்சலி செலுத்தவும், அவர் இறந்த நவம்பர் 13-ஆம் திகதியை அவர்களுடைய மாவீரர் நாளாக அனுஷ்டிப்பதற்கும் உரிமை இருக்கின்றது என்றால், அதே உரிமை எங்களுடைய மக்களுக்கும் இருக்கின்றது என்கின்றதை இந்த அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே நாங்கள் தியாக தீபத்தின் உருவப்படம் வைப்பதற்கோ, அவருடைய திருவுருவச் சிலையை வைப்பதற்கோ எந்தவிதமான தடங்கல்களையும் இந்த அரசாங்கம் ஏற்படுத்தக் கூடாது
என்கிறதை கேட்டுக்கொள்கின்றோம் என்றார்
யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய செயலாளர் அபிஷேக்,
கடந்த 12 நாட்களுக்கு மேலாக தியாக தீபத்தின் நினைவுத்தூபியிலே வைக்கப்பட்டிருந்த வெண்கலச் சிலையினை அகற்றப்பட்டமைக்கு கண்டனத்தை தெரிவிக்கிறோம்.
நினைவஞ்சலி செலுத்துவது என்பது ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்கின்ற உரிமை. அந்த அஞ்சலியை செலுத்தும் வகையில் தியாக தீபத்தின் திருவுருவச் சிலையினை இங்கே நிறுவி இருந்தோம். அதனை போலீசார் அகற்றியுள்ளனர்.
திலீபன் அண்ணாவினை ஒரு பயங்கரவாதியாக கருதித்தான் அவர்கள் இந்த சிலையினை அகற்றியதாக கூறுகின்றார்கள்.
அவர்கள் ஒன்று புரிந்துகொள்ள வேண்டும், தமிழ் மக்களுக்காக அகிம்சை வழியிலே தான் அவர் உண்ணாவிரதம் இருந்து தனது இன்னுயிரை நீத்தார்.
ஆகவே, இந்திய தேசத்தில் மகாத்மா காந்தியினை எவ்வாறு இந்திய தேசம் கொண்டாடுகிறதோ, அதேபோல்தான் தமிழர் தாயகத்திலே நாங்கள் திலீபன் அண்ணாவினை ஒரு மகாத்மா காந்தியை விட மேலானவராகவே ஒரு அகிம்சாவாதியாகவே நாம் கருதுகின்றோம்.
ஆகவே, திலீபன் அண்ணாவின் இந்த திருவுருவச் சிலையினை அகற்றிய அந்த விடயத்திலே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகமாக நாங்கள் கடுமையான ஒரு எதிர்ப்பினை தெரிவித்துக் கொள்கின்றோம்.
திலீபன் அண்ணாவின் சிலையினை வைப்பது ஒரு பயங்கரவாதத்தை தூண்டும் செயல் என இவர்கள் கூறுகின்றார்கள். அவ்வாறெனில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் வைக்கப்பட்டிருக்கின்ற வெற்றி கொண்டாட்ட சுதந்திர நினைவுச் சின்னம் எமது தமிழ் மக்களுக்கு அதிருப்தியையே ஏற்படுத்தி வருகின்றது.
நாங்கள் எந்தவொரு அமைப்பையோ, மீண்டும் ஒரு பயங்கரவாதத்தையோ நாங்கள் தூண்டவில்லை. எமக்காக உயிர்நீத்த எமது அக்கா, அண்ணன், தம்பி, தங்கை, எமது தாய், தந்தையரைத்தான் நாம் நினைவுகூருகின்றோம்.
ஆகவே, இந்த நினைவுகூரும் செயல்பாடானது அடிப்படை உரிமை. இந்த உரிமையைக் கூட மறுக்கப்பட்டால் நாம் இங்கே இலங்கையராக வாழ நாம் வெட்கப்படுகின்றோம் என்பதை கூறிக்கொள்கின்றேன் என்றார்
தியாக தீபத்தின் ஆவண காப்பக செயற்பாட்டாளரான வ , பார்த்தீபன் தெரிவிக்கையில்,
நீத்தோருடைய நினைவை காலாகாலமாக தமிழ் மக்கள் கடைப்பிடித்து வருகின்ற ஒரு விடயமாகும். இங்கே தியாகதீபம் திலீபன் ஒரு மனிதராக, சாதாரணமாய் மரணித்தவராக நாங்கள் பார்க்கவில்லை. அவரை இந்த மண்ணிற்காக மரணித்தவராகவும், எங்களுடைய மக்களுடைய விடுதலைக்காக மரணித்தவராகவும் நாங்கள் பார்க்கின்றோம்.
எந்தவொரு தனி மனிதனினுடைய மரணத்திற்கும் யாரும் இங்கு காவடிகள் எடுப்பதில்லை. அவரை யாரும் இவ்வளவு தூரம் அவரை வணங்குவதில்லை.
ஒரு கடவுளை, ஒரு குலசாமியைத்தான் தங்களுடைய வணக்கத்திற்குரிய தெய்வமாகத்தான் திலீபன் அண்ணாவை பார்த்திருந்தார்கள்.
அதன் காரணமாகத்தான் இந்த மண்ணிலே அந்த குலசாமிக்கு பிரார்த்தனைகள் நடைபெற்றன. அவ்வாறு ஒரு குலசாமியாக நினைத்து வழிபட்ட ஒரு தெய்வத்தினுடைய சிலையை போலீசார் அகற்றி இருப்பது என்பது ஒரு உண்மையிலேயே ஒரு மிலேச்சத்தனமான செயலாகும்.
நான் நினைக்கின்றேன் கடந்த வருடம் உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது எங்களுடைய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு வெண்கலச் சிலை அமைப்போம்,
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுடைய தாயார் பார்வதி அம்மாவின் பெயரிலே துறைமுகங்கள் அமைப்போம்,
எங்களுடைய மாவீரச் செல்வங்கள் புதைக்கப்பட்டிருக்கின்ற துயிலும் இல்லங்களை புனரமைத்து மீண்டும் உங்களுக்கு தருவோம் என்ற பல உறுதிமொழிகளுடன் அரசாங்கம் இந்த ஆட்சிப்பீடத்திலே ஏறவிருந்தது.
எங்களுடைய மக்களும் அவர்களும் ஒரு போராட்ட சிந்தனையிலே வளர்ந்தவர்கள் என்ற அடிப்படையிலே, அவர்களுடைய உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்கள் கூறிய அந்த வாக்குறுதிகளை நம்பி , அவர்கள் இந்த மண்ணிலே காலூன்றுவதற்கு காரணமாக இருந்தனர்.
உள்ளூராட்சி மன்றங்கள் பல தங்களுடைய சட்டவிரோதமான கட்டுமானங்களை அகற்றுமாறு பல கோரிக்கைகளை போலீசாரிடம் காலாகாலமாக விட்டு வருகின்றார்கள்.
ஆனால் போலீசார் அந்த கோரிக்கைகளை என்றைக்குமே செவிசாய்த்து செயல்படுத்துவதில்லை. பல காலங்கள் அதை தட்டிக்கழித்து வருகின்றார்கள்.
ஆனால் 1988-ஆம் ஆண்டிலிருந்து இந்த மண்ணிலே கட்டப்பட்டிருக்கின்ற ஒரு தூபியிலே, நிறுவப்பட்ட ஒரு சிலையை அகற்றி இருக்கின்ற பொலிஸாருக்கு எங்களுடைய வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இங்கு திலீபன் அண்ணாவினுடைய சிலையை நாங்கள் நிறுவுவதனால் இந்த மண்ணினுடைய பண்பாடு அழியவில்லை, இந்த மண்ணினுடைய பாரம்பரியம் அழியவில்லை, இந்த மண்ணினுடைய கலாச்சாரங்கள் அழியவில்லை.
ஆனால் தமிழர் தாயகப்பரப்பெல்லாம் சட்டவிரோத விகாரைகளையும் பௌத்த சின்னங்களையும் நிறுவி, அந்த மண்ணினுடைய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் மாற்றிக்கொண்டு, அதற்கு எதிராக எங்களுடைய மக்கள் போராடுகின்ற பொழுது அதற்கு எதிராக செயற்படும் பொலிஸார் இன்றைக்கு எங்களுடைய குலதெய்வத்தினுடைய சிலையை இந்த இடத்திலே இருந்து அகற்றி இருக்கின்றார்கள். இது வன்மையாக கண்டிக்கப்பட்ட விடயம்.
ஆகவே, இந்த விடயத்திலே அனைவரும் ஒன்றுபட்டு, ஒன்றுதிரண்டு ஒற்றுமையாக அந்த சிலை இந்த மண்ணிலே இந்த இடத்திலே மீண்டும் நிறுவப்படும் வரைக்கும் பல்வேறு வழியிலே போராட வேண்டும் என்றார்.
எனவே திலீபனின் சிலை அகற்றப்பட்ட நிகழ்வானது, வெறும் ஒரு நபர் சார்ந்த நினைவிட அழிப்பு அல்ல; அது தமிழர்களின் கூட்டு நினைவுகூரும் உரிமையின் மீது நடத்தப்பட்ட மற்றுமொரு தாக்குதலாகும்.
உண்மை, நீதி மற்றும் சமரசம் ஆகியவற்றை நோக்கி ஒரு சமூகம் நகர வேண்டுமானால், அந்த சமூகத்தின் வரலாற்று நினைவுகளும் தியாகங்களும் மதிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
அடக்குமுறைகளாலும் சிலை அகற்றல்களாலும் மக்களின் நினைவுகளை அழித்துவிட முடியாது என்பதை உணர்ந்து, அவர்களின் வரலாற்று உரிமைகளை அங்கீகரிப்பதே உண்மையான அமைதிக்கான வழியாகும்.
Pathivu News Pathivu News Pathivu News Pathivu News

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊