தென்மராட்சியின் நிலத்தடி நீரினை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என
இயற்கையின் நண்பர்கள் இயக்கம் பிரதேச செயலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்மராட்சி பிரதேசத்தின் நிலத்தடிநீர் வளம் மற்றும் பொதுமக்களின் சுகாதாரம் மிகவேகமான அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகவும், உலகச் சுற்றாடல் வாரத்தை முன்னிட்டாவது தென்மராட்சி பிரதேச செயலாளர் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் விழித்துக்கொண்டு, உடனடியாக இறுக்கமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ‘இயற்கையின் நண்பர்கள் இயக்கம்’ அவசரக் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆ.சூ.ரமணன் மற்றும் செயலாளர் த.துளசிராம் ஆகியோர் விடுத்துள்ள விரிவான ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
தற்போது உலகச் சுற்றாடல் வாரம் ஆரம்பமாகி, நாடெங்கும் சூழல் பாதுகாப்புப் பற்றிய விழிப்புணர்வுகள் பேசப்பட்டு வரும் நிலையில், தென்மராட்சியின் இயற்கை வளம் திட்டமிட்டு அழிக்கப்படுவது கவலையளிக்கிறது. அதிகாரிகள் சுற்றாடல் வாரத்தைக் கொண்டாடுவதுடன் மட்டும் நின்றுவிடாமல், தென்மராட்சியின் பிரதான சூழல் பிரச்சினையான நிலத்தடி நீர்ச் சுரண்டலைத் தடுக்க இக்காலப்பகுதியில் உறுதியான நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.
தென்மராட்சி பிரதேசம் தனது குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கு நிலத்தடி நன்னீர் வளத்தையே முழுமையாக நம்பியுள்ளது. எனினும், எவ்வித அறிவியல்பூர்வ ஆய்வுகளுமின்றி, உரிய திணைக்களங்களின் அனுமதியின்றி வகைதொகையாக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், சில தனியாருக்குச் சொந்தமான காணிகளில் இருந்து வணிக நோக்கில் பாரவூர்திகள் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு வருகின்றது. இந்த எல்லையற்ற சுரண்டலால் பொதுமக்களின் சாதாரண கிணறுகள் வற்றிப்போவதுடன், தென்மராட்சியின் நன்னீர் அடுக்குக்குள் கடல்நீர் உட்புகும் பேராபத்தும் ஏற்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக தென்மராட்சி பகுதிக்குள் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளியிடங்களில் இருந்து ‘சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்’ என்ற பெயரில் பாரிய வாகனங்கள் (போத்தல்கள் மற்றும் கேன்கள்) மூலம் நீர் கொண்டு வரப்பட்டு, எவ்வித கட்டுப்பாடும் இன்றி வீடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த நீர் எங்கு எடுக்கப்பட்டது? எந்தத் தரத்தில் சுத்திகரிக்கப்பட்டது? அல்லது சாதாரண கிணற்று நீரா? என்பது எவருக்கும் தெரிவதில்லை.
உள்ளூர் மக்களின் ஆரோக்கியத்தை முற்றாகப் பணயம் வைத்து, வெளியிட வணிகக் கொள்ளையர்கள் தென்மராட்சிக்குள் ஊடுருவி நடத்தும் இந்த வர்த்தகம் உடனடியாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும். முறையான தரப்பரிசோதனை சான்றிதழ்கள் இல்லாத வெளிமாவட்ட வாகனங்கள் தென்மராட்சி பிரதேசத்திற்குள் நுழைந்து நீர் விற்பனை செய்வதை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும்.
இதேவேளை, சாவகச்சேரி நகர சபை மற்றும் சாவகச்சேரி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பல இடங்களில் முளைத்துள்ள உள்ளூர் நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் சுகாதாரத் திணைக்களத்தின் அங்கீகாரமோ அல்லது முறையான சட்டபூர்வ அனுமதியோ இன்றிச் செயற்பட்டு வருகின்றன. குடிநீருக்குரிய தரம் இல்லாத இந்த நீர்விநியோகம், எதிர்காலத்தில் தென்மராட்சி பிரதேச மக்களுக்குப் பாரிய சிறுநீரகப் பாதிப்புகள் மற்றும் தொற்றுநோய்களை உருவாக்கும் சுகாதார அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
தென்மராட்சியின் எதிர்காலச் சந்ததியினரின் உயிர்வாழும் உரிமையான குடிநீர் வளத்தைப் பாதுகாக்க, தென்மராட்சி பிரதேச செயலாளர் மற்றும் துறைசார் அதிகாரிகள் ஒருங்கிணைந்து சுற்றாடல் வாரத்தில் இருந்து பின்வரும் கட்டுப்பாடுகளை உடனடியாக நடைமுறைப்படுத்த முயற்சிகள் வேண்டும் என சுற்றுசூழல் சார்ந்து செயற்படும் இயக்கம் என்றவகையில் வலியுறுத்துகின்றோம்:
1-வெளியிடங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து லொறிகள் மற்றும் ஏனைய வாகனங்கள் மூலம் தென்மராட்சிக்குள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படும் குடிநீரின் தரம் மற்றும் அனுமதிப்பத்திரங்கள் சாவகச்சேரி பொலிஸார் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளால் எல்லைகளில் வைத்துப் பரிசோதிக்கப்பட வேண்டும். தகுந்த சான்றிதழ்கள் இல்லாத வாகனங்கள் எமது பிரதேசத்திற்குள் நுழைவது தடை செய்யப்பட வேண்டும்.
2.சாவகச்சேரி பிரதேச சபை மற்றும் சாவகச்சேரி நகர சபை எல்லைக்குள் நீர்வளச் சபையின் முறையான அனுமதியின்றிப் புதிய ஆழ்துளைக் கிணறுகள் தோண்டுவது முற்றாகத் தடை செய்யப்பட வேண்டும்.
3.சாவகச்சேரி பகுதி சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உடனடியாகப் களமிறங்கி, அனைத்து உள்ளூர் நீர்சுத்திகரிப்பு மற்றும் விற்பனை நிலையங்களின் நீரின் தரத்தைப் பரிசோதிக்க வேண்டும்.
4.உள்ளூராட்சி மன்றங்களினால் வழங்கப்படும் வர்த்தக அனுமதிப்பத்திரங்களின் போது சுகாதாரத் திணைக்களம், நீர்வளச் சபை மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பரிந்துரைகள் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
அத்துடன் தென்மராட்சி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இதனை ஒரு பிரதான விவாதப் பொருளாகச் சேர்த்து, முறையான தீர்மானங்களை நிறைவேற்றுமாறு பிரதேச செயலாளரிடமும், மக்கள் பிரதிநிதிகளிடமும் எமது இயக்கம் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுக்கின்றோம்..
இயற்கை அளித்த நன்னீர் வளத்தை வணிகக் கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாத்து, தென்மராட்சி மண்ணின் விவசாயத்தையும், மக்களின் ஆரோக்கியத்தையும் காக்க அனைத்துத் தரப்பினரும் கட்சி பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் என ‘இயற்கையின் நண்பர்கள் இயக்கம்’ சார்பாகக் கேட்டுக்கொள்கின்றோம்.என மேலும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

