தூய்மையான சுற்றுச்சூழலைப் பேணிப் பாதுகாப்பதையும், சமூகப் பொறுப்புணர்வை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, “கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய தூய்மை தின நிகழ்ச்சித்திட்டத்தின் மூன்றாம் கட்ட நிகழ்வு நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 31.10.2026ஆம் திகதி சனிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில் குறித்த நிகழ்ச்சித்திட்டத்தினை யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் நேற்றைய தினம் (28.10.2026) அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, நிகழ்ச்சித்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தைத் திட்டமிட்ட முறையில் நடைமுறைப்படுத்துதல், கழிவு முகாமைத்துவத்தை முறையாகப் பேணுதல், சுற்றுச்சூழலைத் தூய்மையாகப் பேணுவதன் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டுதல், பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவித்தல் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுத்துச் செல்வதற்கான வழிவகைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
தேசிய தூய்மை தின நிகழ்ச்சித்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை வினைத்திறனுடனும் வெற்றிகரமாகவும் முன்னெடுப்பதற்கான தேவையான முன்னாயத்த நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்புடன் செயற்படுவது குறித்தும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
மேலும் மாவட்டச் செயலக முன்றலில் ஆரம்பமாகி கச்சேரி நல்லூர் வீதியின் முத்திரைச்சந்தி வரையான வீதியில் சுத்தமாக்கல் செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக கச்சேரி நல்லூர் வீதியின் புகையிரத கடவை வரையான பகுதியை தூய்மைப்படுத்தி அழகுபடுத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் கலந்துரையாடலின் இறுதியில் குறித்த பகுதிக்குகள விஜயமொன்றும் மேற்கொள்ளப்பட்டது.
இக் கலந்துரையாடலில்
மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) பா. ஜெயகரன்,
கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டத்தின் மாகாண இணைப்பாளரும்,
மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளரும் எஸ். கபிலன் திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், மாநகர சபை ஆணையாளர், உதவி மாவட்ட செயலாளர், இராணுவ பொலீஸ் அதிகாரிகள், துறைசார்ந்த திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மேலும், இதே சம நேரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேச செயலர் பிரிவுகள் ரீதியாகவும் குறித்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?

