கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டு பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையாற்றிக்கொண்டிருந்த போது, தனது கடமைக்கான ரி-56 ரக துப்பாக்கியைத் திருடி, திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல் உறுப்பினர்களிடம் வழங்கிவிட்டு, பின்னர் டுபாய்க்குத் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த ஜயக்கொடி ஆரச்சிகே கவிந்து ஆகாஷ் ஜயக்கொடி என்பவர் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்றும் ஸ்ரீலங்கன் விமான சேவையின் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்றும் டுபாய்க்குச் சென்று அவரைக் கைது செய்ததன் பின்னரே இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் இன்று (26.11.2026) அதிகாலை 05.20 மணியளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-226 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
இவர் அநுராதபுரம், பேமடுவ ஹெலம்பகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞராவார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட இவரைக் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்து வாக்குமூலங்களைப் பதிவு செய்ததன் பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கவுள்ளனர்.
What’s your Reaction?

