மெட்ரோ பேருந்துச் சேவை, தற்போது 122 பேருந்துகளுடன் மேல் மாகாணத்தின் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண நகரில் மெட்ரோ பேருந்துகளை இயக்குவதற்கு விசேட வீதி ஆய்வும் பரீட்சார்த்த ஓட்டமும் நேற்றைய தினம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் 10 பேருந்துகளுடன் முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட மெட்ரோ பேருந்துச் சேவை, தற்போது 122 பேருந்துகளுடன் மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய ஏழு வழித்தடங்களில் இயங்கி வருகிறது.
கொழும்பில் கிடைத்துள்ள அனுபவங்களின் அடிப்படையில், இத்திட்டத்தின் அடுத்த கட்ட விரிவாக்கத்திற்காக யாழ்ப்பாணம் மற்றும் கண்டி மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
2029 ஆம் ஆண்டு வரையிலான தேசியத் திட்டத்தின் கீழ், இலங்கை மெட்ரோ ட்ரான்சிட் நிறுவனத்தின் ஊடாக 100 சதவீத அரசாங்க நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது
மேலும், மெட்ரோ பேருந்து வழித்தட அனுமதிப்பத்திரங்களை முறைப்படுத்துவதற்கும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் பெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுவின் ஊடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது
குறித்த குழுவில் போக்குவரத்து அமைச்சு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC), இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB), வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA), மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை, இலங்கை மெட்ரோ ட்ரான்சிட் நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் உள்ளடக்கப்படுவர்.என தெரிவித்தார்.
What’s your Reaction?

