இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் உறுப்பினர் குமார் ஜெயக்குமாரன்
திருகோணமலை மாவட்டத்தில் வரலாற்று, மத மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில், புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை நடைபெறவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியா வெந்நீர் ஊற்று என்பது தமிழர்களுக்கும், குறிப்பாக இந்து மக்களுக்கும், நீண்டகால வரலாற்று மற்றும் ஆன்மீக தொடர்புடைய புனிதத் தலமாகும். இப்பகுதியில் சிவன் ஆலயமும் பிள்ளையார் ஆலயமும் இருந்ததாகவும், முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக இறுதிக்கிரியைகள் மேற்கொள்ளப்பட்ட புனித இடமாகவும் உள்ளூர் மக்கள் தலைமுறைகளாகக் கருதி வந்துள்ளனர்.
இந்நிலையில், பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்ததாகக் கூறப்படும் பகுதியில் புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் மக்களிடையே பதற்றத்தையும் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.
இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் உறுப்பினரான குமார் ஜெயக்குமாரன் தெரிவித்ததாவது:
“கன்னியா என்பது ஒரு மதத் தலம் மட்டுமல்ல; அது திருகோணமலையின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் தமிழ் மக்களின் அடையாளத்துடன் பின்னிப் பிணைந்துள்ள ஒரு முக்கிய மரபுரிமைச் சின்னமாகும். இதுபோன்ற வரலாற்று மற்றும் மத உணர்வுகள் சம்பந்தப்பட்ட இடங்களில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானமும் அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்து, சட்ட நடைமுறைகளுக்கு இணங்கவும், தொல்லியல் மற்றும் வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.”
அவர் மேலும் கூறுகையில்,
“இந்த விவகாரம் தொடர்பில் பல்வேறு சமூக அமைப்புகளும் பொதுமக்களும் முன்வைக்கும் கவலைகளை அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உரிய முறையில் கவனத்தில் கொள்ள வேண்டும். அனைத்து இனங்களும் மதங்களும் பரஸ்பர மரியாதையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழும் சூழலைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும்.”
மேலும், கன்னியா வெந்நீர் ஊற்று தொடர்பான வரலாற்று மற்றும் தொல்லியல் உண்மைகள் குறித்து வெளிப்படையான விளக்கத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்க வேண்டும் என்றும், எந்தவொரு அபிவிருத்தி அல்லது கட்டுமான நடவடிக்கைகளும் சட்ட நடைமுறைகள், நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் அனைத்து சமூகங்களின் மத, பண்பாட்டு உணர்வுகளை மதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை, தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக உள்ள அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி, மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
– குமார் ஜெயக்குமாரன்
இலங்கைத் தமிழ் அரசு கட்சி
உறுப்பினர் திருகோணமலை மாவட்டம்
What’s your Reaction?

