யாழ்ப்பாணத்திற்கும் இரத்தினபுரிக்கும் இடையில் கலாசார மற்றும் மொழிப் பரிமாற்றத்தை மேம்படுத்தும் நோக்கில், இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து வருகைதந்த உத்தியோகத்தர்கள் 10.09.2026 அன்று முற்பகல் 9.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு வருகை தந்தனர்.
வருகைதந்த உத்தியோகத்தர்களுக்கான அறிமுக நிகழ்வு, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு கலாசார அறிவு மற்றும் கலாசார அம்சங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், இவ்விஜயம் கலாசார அறிவு, பாரம்பரியம் மற்றும் தமிழ் மொழியின் சிறப்புகள் தொடர்பாக அறிந்துகொள்வதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் எனவும், இரத்தினபுரிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான கலாசார, இன மற்றும் மத நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தும் நிகழ்வாக இது அமையும் எனவும் குறிப்பிட்டார்.
இவ்விஜயம் மூன்று நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இக்காலப்பகுதியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள முக்கியமான இடங்களைப் பார்வையிடுவதற்கும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா தற்போது நடைபெற்று வருவதைக் குறிப்பிட்ட அரசாங்க அதிபர் அவர்கள், வருகைதந்த உத்தியோகத்தர்கள் நல்லூர் திருவிழாவில் கலந்துகொண்டு இறையருளைப் பெற்றுக்கொள்ளுமாறும் வாழ்த்துத் தெரிவித்தார்.
இதன்போது, யாழ்ப்பாண மாவட்ட உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி அவர்களால் யாழ்ப்பாண மாவட்டம் தொடர்பான பல்வேறு விடயங்கள் விளக்கக்காட்சிகள் ஊடாக முன்வைக்கப்பட்டன.
தேசிய மொழிகள் மாகாணப் பொறுப்பதிகாரி திரு. ந. உமாநாத் அவர்களால், மூன்று நாள் விஜயத்தின்போது பார்வையிடப்படவுள்ள இடங்கள் மற்றும் நடைபெறவுள்ள நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள் எடுத்துரைக்கப்பட்டன.
இவ்விஜயம் மொழிப் பரிமாற்றத்தின் ஊடாக கலாசார ஒருங்கிணைப்பை வளர்ப்பதுடன், பல்வேறு மக்கள் குழுக்களிடையே பரஸ்பர புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா. ஜெயகரன், இரத்தினபுரி மாவட்ட செயலக மேலதிக மாவட்ட செயலாளர் B. T. G. I. கருணாரத்ன, மேலதிக மாவட்ட செயலாளர் அமிலா விஜயரத்தின, கணக்காளர் பி. ஜி. கே. நில்மியு, யாழ்ப்பாண மாவட்ட பதவி நிலை உத்தியோகத்தர்கள், தேசிய மொழிகள் மாகாணப் பொறுப்பதிகாரி திரு. ந. உமாநாத் மற்றும் இரத்தினபுரி மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


