யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள “PayDigital” பிரச்சார நடவடிக்கைகளின் ஏற்பாடுகள் தொடர்பில்
இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இக் கலந்துரையாடலில் இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் திணைக்களத்தின்(Payments and Settlements Department)சிரேஸ்ட உதவிப் பணிப்பாளர் ஜி.கே. மொஹொட்டி மற்றும் ஏ.எஸ்.எம்.பி.எம்.பி. அகலவத்த ஆகியோருடன் பிராந்திய முகாமையாளர் எஸ்.பகீரதி ஆகியோர் பங்குபற்றினார்கள்.
இச் சந்திப்பின் போது, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ள “PayDigital” பிரச்சார நடவடிக்கைகளின் ஏற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்புகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடினர்.
இலங்கை மத்திய வங்கியினால் ஏற்பாடு செய்யப்படும் இப்பிரச்சாரம், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறைகளை ஊக்குவித்தல், பாதுகாப்பான மற்றும் எளிமையான மின்னணு நிதி பரிவர்த்தனைகள் குறித்த பொதுமக்கள் விழிப்புணர்வை உயர்த்துதல் மற்றும் தனிநபர்கள், வணிகர்கள் மற்றும் நிறுவனங்கள் மத்தியில் டிஜிட்டல் கட்டண முறைகளின் பயன்பாட்டை விரிவுபடுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், “PayDigital” பிரச்சாரம் பொதுமக்கள் மற்றும் வணிக சமூகத்தினருக்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அமைப்புகள் மற்றும் அவற்றின் நன்மைகள் குறித்த தெளிவான புரிதலைப்பெற உதவுவதோடு, பிராந்தியத்தில் உள்ளடக்கமான, திறமையான மற்றும் டிஜிட்டல் திறன் பெற்ற நிதி சூழலை உருவாக்கும் முயற்சிக்கு வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What’s your Reaction?

