யாழ். மாவட்டத்தில் டெங்கு நுளம்பு ஒழிப்பிற்கான விசேட வேலைத்திட்டம் எதிர்வரும் 09, 10, 11 மற்றும் 12ஆம் திகதிகளில் முன்னெடுகவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற டெங்கு கட்டுப்பாட்டு குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக யாழ்.மாவட்டத்தில் அதிக ஆபத்துள்ள கரவெட்டி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கோப்பாய், சங்கானை, சாவகச்சேரி, நல்லூர், சண்டிலிப்பாய், தெல்லிப்பழை மற்றும் உடுவில் ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் ஜீன் மாதம் 09ம் திகதி தொடக்கம் 12ஆம் திகதிவரை விசேட டெங்கு கட்டுப்பாட்டு வார நடவடிக்கைகள் செயற்படுத்தப்படவுள்ளது.
இதன்படி 09.06.2026ஆம் திகதி பொதுமக்களின் வீடுகள் மற்றும் சுற்றுச்சூழலிலும், 10ஆம் திகதி மாவட்டத்தின் சகல அரச மற்றும் தனியார் அலுவலகங்களிலும், 11ஆம் திகதி பாடசாலை மற்றும் சகல கல்வி நிறுவனங்களிலும், 12ஆம் திகதி வர்த்தக நிலையங்கள், சந்தைகள், மதஸ்தலங்கள் மற்றும் பொது அமைப்புகள் சிரமதான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

