மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் ஹொக்கி அணியின் பயன்பாட்டிற்காக, கல்லூரி அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க சுமார் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான ஹொக்கி விளையாட்டு உபகரணங்கள் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டுக் கழகம், கோட்டைமுனை விளையாட்டுக் கிராமம் மற்றும் ஈ.பீ.பீ. ஆகியவற்றின் அனுசரணையில் இன்று திங்கட்கிழமை (08) கையளிக்கப்பட்டன.
மட்டக்களப்பு இந்துக் கல்லூரி அதிபர் கே. பகீரதன் தலைமையிலான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் குறித்த விளையாட்டு உபகரணங்கள், மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டுக் கழகத் தலைவர் பி. சடாட்சரராஜா, நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் எஸ். சிவநாதன், கோட்டைமுனை விளையாட்டுக் கிராம செயலாளர் டி. வசந்தமோகன் உள்ளிட்ட கோட்டைமுனை விளையாட்டுக் கழக உறுப்பினர்களால் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கோட்டைமுனை விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், இந்துக் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இத்தகைய அனுசரணைகள் மாணவர்களை தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் சாதனைகள் படைக்க ஊக்குவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
(மட்டக்களப்பு நிருபர்)


