மட்டக்களப்பு மாவட்டத்தின் களப்பு மற்றும் வாவிகளுடன் தொடர்புடைய வெள்ள அனர்த்தங்களை தவிர்ப்பதற்கான உயர் மட்ட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலகத்தில் இன்று (14.05.2026) இடம் பெற்றது.
மாவட்ட செயலகம், கிழக்கு பல்கலைக்கழகம், FoRID அரச சார்பற்ற நிறுவனத்துடன் இணைந்து வெள்ள மற்றும் ஏனைய அனர்த்தங்களை தவிர்ப்பதற்கான அனர்ததனிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான விடயங்கள் பல கலந்துரையாடப்பட்டன.
மட்டக்களப்பு வாவியின் ஆழம் குறைந்துள்ளமை, களப்பினை துர்வாராமை, நீரேந்து பிரதேசங்கள் குறைந்து வருதல், மாதூரு ஓயாவின் நீர்வரத்து வெள்ளப்பெருக்கிற்கான பிரதான காரணமாக காணப்படுவது இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இதன் போது காலநிலை மாற்றம் மற்றும் தித்வா புயலினால் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாக பேராசிரியர் கே.ராஜேந்திரன் அவர்கள் அளிக்கையினுடாக அதிகாரிகளுக்கு தெளிவூட்டினார்.
இந் நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர்களான வி.கணகசிங்கம், கே. ராஜேந்திரம், ரீ.மதிவேந்தன், பிரதேச செயலாளர்கள், பொறியியலாளர்கள், திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், துறைசார் நிபுணர்கள், உயர் அதிகாரிகள் மாவட்ட அனர்த்த முகாமைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் மட்டக்களப்பு களப்பினை நம்பி பலரின் வாழ்வாதாரம் தங்கியிருப்பதினால் களப்பினை மாசு ஏற்படாத வகையில் பாதுகாக்க வேண்டும் என்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அனர்த்த தனிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாவட்ட செயலகம் யப்பான் நாட்டு பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்


