இந்தியாவின் கர்நாடக மாநிலத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் வைத்தியர் இளையதம்பி சிறீநாத் ஆகியோர், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் R. Gundu Rao அவர்களின் புதல்வனும், காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில சட்டமன்ற உறுப்பினருமான Mr. Dinesh Gundu Rao அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது, தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் தீர்வு இன்னும் எட்டப்படாத சூழலில், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் இராணுவ மயமாக்கல், நில ஆக்கிரமிப்பு மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தற்போதும் பெரும் இன்னல்களுடனேயே வாழ்ந்து வருகிறார்கள் என்பது சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு மற்றும் அவர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் வகையிலான நிரந்தர அரசியல் தீர்வொன்றை நோக்கிய நகர்வுகளில் இந்தியாவின் வகிபாகம், சர்வதேச ரீதியிலான அழுத்தங்களின் அவசியம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான பாதுகாப்பு சூழலை உருவாக்குவது தொடர்பிலும் இங்கு காத்திரமாக வலியுறுத்தப்பட்டது.
ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் ஆறாத வடுவாகவும், தற்போது ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய மனிதப்புதைகுழியாக அடையாளப்படுத்தப்பட்டு வரும் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்தும் இதன்போது மிக ஆழமாக உரையாடப்பட்டது. செம்மணி உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற கொடூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் தற்போதைய அவல நிலை ஆகியவற்றுக்கு சர்வதேச ரீதியிலான நியாயமான நீதியினை நிலைநாட்டுவது தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

What’s your Reaction?

