இம்மாதம் 13 ஆந் திகதி ஜனாதிபதி அனுரகுமார தலைமையில் மறைந்த ஜே.வி.உறுப்பினர்களை நினைவுகூரும் கார்த்திகை வீரர் நாள் வெகு சிறப்பாக நினைவுகூரப்பட்டது. அதேபோல ஒவ்வொரு ஆண்டும் மே 19 ஆந்திகதி தேசிய போர் வீரர் நாள் அரச நிகழ்வாக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முன்னது பயங்கரவாதிகள் எனக்கூறிக் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்ந்து பயங்கரவாதிகள் என ஒரு காலத்தில் சொல்லப்பட்டவர்களால் நினைவுகூரப்படுகிறது. மற்றது பயங்கரவாதிகள் எனச் சொல்லி அவர்களைக் கொன்ற படைவீரர்களின் வெற்றிவிழாவாக அரசாங்கத்தினால் கொண்டாடப்படுகிறது. அந்த விழாவையும் பயங்கரவாதியாக சொல்லப்பட்டவர்களின் தற்போதைய தலைவரே தலைமை தாங்குகிறார். இந்த இரண்டு தரப்புகளையும் பயங்கரவாதிகளாகச் சித்தரித்துக் கொன்றவர்கள் இலங்கை அரச படையினர். அந்த படைகளின் தற்போதைய தலைவர் முன்னர் பயங்கரவாதிகளாகச் சொல்லப்பட்டவர். அதேபோல இரண்டிலும் பயங்கரவாதிகள் என ஒருதரப்பால் சொல்லப்பட்டவர்கள் மறுதரப்பால் விடுதலைப்போராளிகள் எனக் கருதப்படுபவர்கள். பயங்கரவாதிகளாகக் கருதப்பட்ட ஒரு தரப்பினர் இன்று நாட்டுப் பற்றாளர்களாக நாட்டின் ஜனாதிபதி தலைமையில் நினைவுகூரப்படுகிறார்கள். ஆனால் இன்னொரு தரப்பினரை அவர்களது மக்கள் நினைவுகூருவதற்கு அதே ஜனாதிபதி தடைவிதிக்கிறார். இந்த முரண்பாடுகளுக்கு பின்னாலுள்ள அரசியலை தமிழ்மக்கள் விளங்கிக்கொள்ளவேண்டியது கட்டாயமானதாகும்.
எது பயங்கரவாதம்? யார் பயங்கரவாதிகள்? பயங்கரவாதம் தொடர்பாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய வரைவிலக்கணம் எதுவும் இன்றுவரை இல்லை. 2004 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை ‘ பொதுமக்களை அச்சுறுத்தவும் அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கவும் அப்பாவிப் பொதுமக்கள்மீது மேற்கொள்ளப்படும் எந்தவொரு வன்முறையும் பயங்கரவாதமாகக் கருதப்படவேண்டும்’ என்றதொரு முன்மொழிவை வைத்தது என்றாலும் அது இன்னும் ஒரு சட்டமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பயங்கரவாதம் என்றால் என்ன என்பதை ஏன் வரையறைக்க முடியாதுள்ளது? ஏனெனில் பயங்கரவாதம் அல்லது பயங்கரவாதிகள் என்பது அவரவர் பார்வைக்கும் தேவைக்கும் ஏற்ப வேறுபடுவதாலாகும். ஒரு இனத்தின் அல்லது நாட்டின் விடுதலைக காகப் போராடுபவர்கள் அந்த இனத்தின் அல்லது நாட்டின் மக்களுக்குச் அவர்கள் விடுதலைப்போராளிகள் அல்லது சுதந்திர வீரர்கள். அதேவேளை அந்த இனத்தையோ அல்லது நாட்டையோ அடக்கி ஆக்கிரமிப்புச் செய்பவர்களுக்கு அவர்கள் பயங்கரவாதிகள். அதேவேளை ஆக்கிரமிப்பாளர்களும் அவர்களின் படைகளும் விடுதலையை வேண்டி நிற்பவர்களுக்குப் பயங்கரவாதிகள். இது பெரும்பாலும் அரச பயங்கரவாதமாக அமைகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லது வேறு போராளிகள் சிறிலங்கா அரசுக்குப் பயங்கரவாதிகள்.ஆனால் தமிழ் மக்களுக்கு அவர்கள் விடுதலை வீர்ர்கள். அதேவேளை அரச படைகளும் அவர்களின் ஏவலாளிகளும் தமிழ் மக்களுக்குப் பயங்கரவாதிகள். இது அரச பயங்கரவாதம்.
எவ்வாறெனினும் எந்த நோக்கத்துக்கென்றாலும் எந்தத்தரப்பென்றாலும் அப்பாவிப் பொதுமக்கள்மீது எந்தவடிவத்திலேனும் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் பயங்கரவாதமாகக் கருதப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. ஐ.நாவும் அதைத்தான் வலியுறுத்துகிறது. தமது உரிமைகளுக்காகவும் சுதந்திரத்துக்காவும் அடக்குமுறையாளர்கள்மீது, அது அரசாங்கமாக இருந்தாலும்கூட மேற்கொள்ளப்படும் எந்தவொரு வன்முறையும் பயங்கரவாதமன்று. பொதுவாக அடக்குமுறையாளர்களுக்கு எதிரான ஆயுதப்போராட்டத்தை பயங்கரவாதமென்று சித்தரித்து அமைதிவழிப் போராட்டங்களை ஊக்கப்படுத்தும் முயற்சிகளுண்டு. அவ்வாறு அமைதிவழியை ஊக்குவிப்பதற்கு வேறுகாரணங்கள் இருந்தாலும் ஆயுத வழியிலான சுதந்திரப் போராட்டம் ஒருபோதும் பயங்கரவாதமாகாது. சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களை ஐ.நா சாசனம் அங்கீகரிப்பதுடன், அதன் 37/43 தீர்மானம் ஆக்கிரமிப்பிலிருந்து விடுபடுவதற்காக ஆயுதப்போராட்டம் உட்பட கிடைக்கக்கூடிய அனைத்துவழிகளிலும் போராடும் உரிமையை அது ஏற்றுக்கொள்கிறது. இலங்கையின் தொல்குடிகளான தமிழர்கள் ஒரு தேசிய இனம். அவர்கள் தமக்கான சுயநிர்ணய உரிமையைக் கோருவதற்கு சர்வதேச சட்டங்கள் ஏற்றுக்கொள்ளும் அனைத்து தகுதிவிதிகளையும் கொண்டுள்ளனர். அந்தவகையில் அந்த இனத்துக்கான சுயநிர்ணய உரிமையைப் பெறுவதறகாகப் போராடிய ஓர் அமைப்பை அல்லது அமைப்புகளை எவ்வாறு பயங்கரவாதிகள் என்று வரையறுக்க முடியும்?
அவ்வாறெனில் இங்கு எழுகின்ற முக்கியமான கேள்வி விடுதலைப் புலிகளை சிறிலங்கா அரசாங்கம் பயங்கரவாதிகளாக கருதியதற்கு காரணங்கள் உண்டென்றாலும் அமெரிக்கா உட்பட வெளிநாடுகள் பல அவர்களைப் ஏன் பயங்கரவாதிகளாகப் பட்டியலிட்டார்கள் என்பதாகும். உண்மையில் வெளிநாடுகளின் இவ்வாறான தடைகளுக்குப் பயங்கரவாதச் செயல் காரணம் என்பதைவிட அந்நாடுகளின் புவிசார் அரசியல் நலன்களே அதற்கான முக்கிய காரணியாகும். உலகில் ஒரேமாதிரியான விடுதலைப்போராளிகள் அமைப்புகளில் சிலவற்றை பயங்கரவாத அமைப்புகளாகவும் வேறுசிலவற்றை சுதந்திரப் போராளிகளாகவும் இந்நாடுகள் கருதியமைக்கு அந்தந்த நாடுகள் தொடர்பிலான புவிசார் கொள்கைகளே காரணமாக இருந்தன. பனிப்போர் காலத்தில் சோவியத் ஒன்றியத்தின் ஆதிக்கத்துக்கு எதிராக இருந்த ஆயுதப் போராட்ட அமைப்புகள் எல்லாம் அமெரிக்கா உட்பட ஏனைய மேற்குலக நாடுகளுக்கு சுதந்திரப் போராளிகள். பனிப்போர் முடிந்தபின் அமெரிக்க மற்றும் மேற்குலக ஆதிக்கத்துக்கு எதிராக அவ்வமைப்புகள் திரும்பியபோது அவை பயங்கரவாத அமைப்புகள். இதுவே பயங்கரவாதம் தொடர்பான அந்நாடுகளின் நிலைப்பாடு. அதுமட்டுமன்றி ஒரு நாட்டில் மேற்குலகு சார்பான தலைவரும் அவரது அரசாங்கமும் இருக்கும்போது அந்த அரசாங்கத்துக்கு எதிராகப் போராடுபவர்கள் பயங்கரவாதிகள். அந்தத் தலைவரும் அரசாங்கமும் மாறி மேற்குலகுக்கு எதிரான ஓர் அரசாங்கம் அந்நாட்டில் வரும்போது முன்னர் அவர்களால் கூறப்பட்ட பயங்கரவாதிகளை பின்னர் சுதந்திர வீர்ர்களாக அவர்களே கொண்டாடுவார்கள். ஒரு நாட்டில் மேற்குலகத்துக்கு ஆதரவான தலைவர் இருந்து அந்நாட்டின் வளங்களைச் சுரண்ட அனுமதித்தால் அந்நாடு அவற்றின் நட்பு நாடு. அது நடக்காதபோது அந்நாடுகள் பயங்கரவாத்த்தை ஊக்குவிக்கும் நாடுகளாக மாறிவிடும். ஈராக்,லிபியா,ஈரான்,வெனிசுலா போன்ற பல நாடுகள் இப்படித்தான் அமெரிக்காவுக்கு நட்பு நாடுகளாகவும் பயங்கரவாத நாடுகளாகவும் காலத்துக்குக்காலம் மாறின.
ஆப்கானிஸ்தானில் ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட்டபோது முஜாகிதின் மற்றும் ஹக்கானி அமைப்புகள் அமெரிக்காவுக்கு சுதந்திர வீர்ர்கள். ரஷ்ய அந்நாட்டிலிருந்து வெளியேறிய பின் அவை பயங்கரவாத அமைப்புகள். கொசோவாவில் செர்பிய அரசுக்கு எதிராகப் போராடியபோது கொசோவா விடுதலை இராணுவம் பயங்கரவாத அமைப்பு. பின்னர் செர்பிய அதிபர் ஸ்லோபடான் மிலோசவிக்கு எதிராக அது போராடியபோது சுதந்திர போராட்ட அமைப்பு. அதேபோல சிரியா, ஈரான்,குர்திஷ் போன்ற போராளிக்குழுக்களும். பின்லாடனை ஊக்கிவளர்த்த அமெரிக்காதான் பின் அவரைக் கொன்றது. தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சி நிலவியபோது நெல்சன் மண்டேலாவைப் பயங்கரவாதி எனக்கூறிய அமெரிக்காதான் பின்னர் ஆபிரிக்கத் தேசியக் கொங்கிரஸை சுதந்திர போராட்ட இயக்கமாக அறிவித்து மண்டேலாவையும் போற்றிப் புகழ்ந்தது. அவருக்கு நோபல் சமாதானப் பரிசும் கிடைத்தது. இதேபோலவே பலஸ்தீனத்தலைவர் யாசீர் அரபாத்தும். இங்கே பயங்கரவாதம், பயங்கரவாதி என்ற அடையாளம் நபர்களையோ அன்றி அவர்களின் செயல்களையோ அடிப்படையாகக்கொண்டவை அல்ல. அதனைக்கூறும் நாடுகளின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவைபோல பயங்கரவாதம்,பயங்கரவாதிகள் பற்றிய இன்னும்பல திருகுதாளங்கள் உலகில் அன்றாடம் நிகழ்ந்த வண்ணமே உள்ளன.
இவற்றைவிட விடுதலைப் புலிகள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கங்களின் நிலைப்பாடுகள் இன்னும் வேடிக்கையானது. இன்றுவரை தடைசெய்யப்பட்ட அமைப்பாக வைத்திருக்கும் விடுதலைப் புலிகளுடன்தான் அமைதிப் பேச்சுவார்த்தைகளை பலதடவைகள் அரசாங்கம் மேற்கொண்டது. கொழும்பில் மட்டுமன்றி வெளிநாட்டு நகரங்களிலும் அவை நடைபெற்றன. இந்தப்பேச்சுவார்த்தைகளுக்கு உள்நாட்டு வளப்படுத்தினர்கள் மட்டுமன்றி வெளிநாட்டு சமாதானத் தூதுவர்களும் அனுசரணையாளர்களாக இருந்தனர். இவ்வாறு தாங்களே பயங்கரவாதிகள் என அறிவித்துவிட்டு அவர்களுடன் ஒரே மேசையில் சமதையாக அமர்ந்து பேசினார்கள், அதற்கு வெளிநாடுகளால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் தூதுவர்களாகச் செயற்பட்டார்கள் என்றால் பயங்கரவாதிகள் என்பதன் பொருள் என்ன? விடுதலைப்புலிகளுடனான அரசாங்கங்களின் பேச்சுவார்த்தைகள் அவர்களின் தனிப்பட்ட விடயங்கள் பற்றியதன்று. அவை இந்நாட்டின் தமிழர்களின் அரசியல் தீர்வு சம்பந்தமானவை. அவர்கள் பயங்கரவாதிகள் என்றால் ஏன் அரசியல் தீர்வுபற்றிப் பேசவேண்டும்? யதார்த்தம் வேறானது. அவர்கள் பயங்கரவாதிகளல்லர். தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் அமைப்பு என்பது சிறிலங்கா அரசாங்கங்களுக்கு மட்டுமன்றி உலகநாடுகளுக்கும் தெரியும். இதுதான் யதார்த்தம்.
விடுதலைப்புலிகளைத் தமிழ் மக்கள் நினைவுகூருவதை ஏன் தடுக்கிறீர்கள் என்ற கேள்விக்கு அரசாங்கத்தலைவர்கள் கூறும் ஒரே வாய்ப்பாடு அது தடைசெய்யப்பட்ட அமைப்பு என்பதே. அவர்களிடம் அம்மக்கள் கேட்கவிரும்பும் மறுகேள்விகள். யார் தடைசெய்தார்கள்? நீங்கள் தானே தடைசெய்யும் சட்டத்தை உருவாக்கினீர்கள். அந்தச் சட்டம்தான் தடையென்றால் அந்தச்சட்டத்தை அகற்றலாம்தானே. அச்சட்டத்தை அகற்றுவதற்கு ஏன் தயங்கவேண்டும்? அதுவும் விடுதலைப்புலிகளை அழித்துவிட்டதாக மார்தட்டும் நீங்கள் இல்லாதவர்கள்மீதான தடையை ஏன் தொடரவேண்டும்? அப்படியானால் அதற்குப்பின்னால் வேறு தேவைகள் உள்ளன என்றுதானே கருதவேண்டும். அச்சட்டத்தை அகற்றினால் அவர்கள் மீள எழுச்சியடைந்து விடுவார்கள் என்று கருதுவதுதான் காரணமா? நீங்கள் கூறுவதுபோல அவர்கள் பயங்கரவாதிகள் என்றால் மக்கள் ஆதரவின்றி எவ்வாறு மீள எழுச்சிபெற முடியும்?
உண்மைநிலை என்னவென்பது சிங்களத்தலைவர்களுக்கு மட்டுமன்றி உலகுக்கும் தெரிந்ததே. விடுதலைப்புலிகள் இல்லாவிட்டாலும் அவர்கள் எதற்காகப் போராடினார்களோ அதற்கான தேவை இன்றும் உள்ளது. விடுதலைப்புலிகள் மட்டுமல்ல அவர்களுக்கு முந்திய தமிழ்த்தலைவர்களும் அதற்காகத்தான் போராடினார்கள். போராட்ட வடிவங்கள் வேறானவை என்றாலும் நோக்கம் ஒன்றானது. அதுவே இந்நாட்டின் தேசிய இனமான தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை. அதற்கான போராட்டம் ஆயுத வடிவத்தை எடுத்தமைக்கு தமிழர்களல்ல சிங்களத்தலைவர்களே காரணம். எனவே தமிழ்மக்கள் தமக்கான சுயநிர்ணய உரிமையைப் பெறும்வரையிலும் போராடவே செய்வார்கள்.அதனைத் தடுப்பதற்காகவே விடுதலைப் புலிகள் மீதான தடைச்சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம் தமிழ் மக்களை அடக்கும் சட்டங்களை தொடரவேண்டியுள்ளது என்பதுதான் உண்மை. தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளை அங்கீகரிக்கும்போது இவ்வாறான சட்டங்கள் எவற்றுக்கும் அவசியமேற்படாது. அதைவிடுத்து இவ்வாறான சட்டங்களால் தமிழ் மக்களை அடக்கவும் அவர்களின் உணர்வுகளை அமுக்கவும் முடியுமேயன்றி ஒருபோதும் அகற்றிவிட முடியாது.
‘இழந்த தமது உறவினர்களை நினைவுகூரத் தடையில்லை. ஆனால் விடுதலைப்புலிகளை நினைவுகூர முடியாது’. இதுவும் சிறிலங்கா அரசாங்கங்களின் நிலைப்பாடுகளில் ஒன்று. அண்மையில் திலீபனின் நினைவு நிகழ்வு தொடர்பாகவும் முதல் பெண் வீரர் மாலதியின் நினைவு நிகழ்வு தொடர்பாகவும் தொடரும் சட்ட நடவடிக்கைகளுக்கு இதுதான் அடிப்படை. பூனை கண்ணை மூடினால் இருண்டுவிடுமா? தமிழ் மக்கள் தமது உறவினர் என்பதற்காகவா விடுதலைப்புலிகளை நினைவுகூருகிறார்கள்? இல்லை. அவர்கள் தமிழ்த்தேசத்தின் விடுதலை வீரர்கள். தமிழ் மக்களின் காவலர்கள். அம்மக்களுக்காக உயிர்நீத்த மாவீரர்கள். அவர்கள் தனிப்பட்ட உறவினர்கள் அல்லர். ஆனால் தமிழ்த்தேச மக்கள் அனைவரதும் உறவுகள். அது தேசத்தின் உணர்வு. அதனால்தான் ஊரே திரண்டு ஒளியேற்றி அந்த காவல் தெய்வங்களை வணங்குகிறார்கள். இதில் நினைவுகூருவதல்ல சிறிலங்கா அரசாங்கத்துக்குள்ள பிரச்சினை. அதன்மூலம் மக்களின் திரட்சியும் தமது தேசத்திற்கான விடுதலை உணர்வை அவர்கள் மீண்டும் மீண்டும் உரப்படுத்திக்கொள்வதுமே பௌத்த சிங்கள மேலாதிக்கத்துக்கு ஏற்படுகின்ற பிரச்சினை. அதற்கு அனுரவும் விதிவிலக்கல்ல.
விடுதலைப் புலிகளை நினைவு கூரத் தடைவிதிக்கும் அனுரவும் அவரது சகபாடிகளும் மறைந்த தமது தோழர்களுக்கான கார்த்திகை வீரர் நினைவுநாளை கடந்த 13 ஆந்திகதி உணர்வுபூர்வமாக நடத்தி உறுதியுரை எடுத்துக்கொண்டனர். அந்த உறுதியுரையானது தியாகங்களைப் போற்றுதல்,இலட்சியப் பயணம்,அடக்குமுறைக்கு அஞ்சாமை,மக்கள் சேவை என்பவற்றைக்கொண்டதான மறைந்த தமது தோழர்களின் இலக்குகளை அடையத் தொடர்ந்து போராடுவோம் என்பதாகும். அதே இலக்குகளைக் கொண்டுதானே விடுதலைப்புலிகளும் போராடினார்கள். ஜே.வி.பியின் பின்னால் சென்ற மக்களைவிட விடுதலைப் புலிகளின் பின்னால் திரண்ட தமிழ் மக்கள் அதிகமல்லவா? ஜே.வி.பி போராடியபோது அதுவும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புத்தான். அதை எதிர்த்த ஜே.வி.பியின் இன்றைய தலைவர் அதைத் தமிழ் மக்கள் மீது திணிப்பது எவ்வகையில் நியாயமானது? விடுதலைப் புலிகள் தொடர்பான எந்தவொரு தோற்றப்பாடும் மாவீர்ர் நினைவுநாளில் காட்சிப்படுத்தக் கூடாது என்று கட்டளையிடும் அனுர இறுதிவரை பயங்கரவாதியாக அரசாங்கத்தினால் கருதப்பட்டது மட்டுமன்றி அதற்காகவே கொலையும் செய்யப்பட்ட றோகண விஜேவீராவின் உருவத்தை அதே இலச்சினைகளுடன் கார்த்திகை வீர்ர் நாளில் எவ்வாறு காட்சிப்படுத்த முடியும்? இவ்வாறு நியாயங்கள் வேறுபடுவதற்கு காரணம் ஒன்றுதான். அது தமிழ்த்தேசியவாதத்தை அடக்கி பௌத்த சிங்கள தேசியத்தை இலங்கைத் தீவில் முழுமையாக்குதலாகும். பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் தீவிரமாக எதிர்த்த அனுர இன்று அதனை நியாயப்படுத்தவதிலிருந்து அவர்வேறுபட்டவராகத் தமிழ் மக்களுக்குத் தெரியவில்லை.
வார்த்தைகளால் மட்டும் மாற்றம் வந்துவிடாது. கோசங்களால் மட்டும் சமத்துவமும் சமாதானமும் ஏற்பட்டுவிடாது. தோற்றம் மட்டுமே இடதுசாரிகள் ஆக்கிவிடாது. அடக்குமுறைகளாலும் ஆக்கிரமிப்புக்களாலும் அனைவரையும் இலங்கையராக்கிவிடமுடியாது. தமிழ் மக்களுக்கு உள்ளது பொருளாதார,சமூகப் பிரச்சினைகளே என்று முழுப்பூசினிக்காயை சோற்றில் மறைக்க முயல்வதால் உண்மை மறைந்துவிடாது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை அங்கீகரித்து அரவணைத்துச் செல்வதன்மூலமே இவையெல்லாவற்றையும் அடைய முடியைமென்பதை தோழர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
நன்றி
கந்தையா அருந்தவபாலன்
What’s your Reaction?

