அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரை முன்றலில், பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த பிக்குகள், சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு ரஜங்கனயே சத்தாரதன தேரர் தலைமையிலான குழுவினர் வருகை தந்தபோதே அங்கு பதற்றம் உருவானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, ருவன்வெலிசாய விகாரை முன்றலில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரருக்கு, நாளை (13) கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி விகாரமகாதேவி பூங்கா வளாகத்தில் நடைபெற்ற சத்தியாக்கிரகத்தின் போது ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலையில், பொலிஸ் அதிகாரிகள் தம்மைத் தாக்கியதாகத் தேரர் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமையவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நேற்று (11.11.2026) காலை 10 மணிக்கு கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் விசாரணைப் பிரிவு 2 இல் முன்னிலையாகுமாறு உடமலுவ பொலிஸ் நிலையம் ஊடாக கஸ்ஸப தேரருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், தேரர் வாக்குமூலம் வழங்கச் சமுகமளிக்காததுடன், தாம் வருகை தரப்போவதில்லை என எவ்வித முன்னறிவிப்பையும் விடுத்திருக்கவில்லை.
இதனையடுத்து, நாளை (13.11.2026) கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு உடமலுவ பொலிஸார் ஊடாக மீண்டும் தேரருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட பலாங்கொடை கஸ்ஸப தேரர், தாம் எந்தவொரு நீதிமன்ற உத்தரவையும் பின்பற்றப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமக்கு எந்தவொரு நீதிமன்ற உத்தரவையும் கையளிக்க முடியாது எனவும், தமக்கு உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் ‘சங்க நீதிமன்றத்துக்கு’ (சங்க சபைக்கு) மட்டுமே உண்டு எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

