அம்பாறை பிரதான பேருந்து நிலையத்திலிருந்து கேத்சிரிகம நோக்கிச் சென்ற பேருந்து ஒன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘ஐஸ்’ போதைப்பொருளுடன், அப்பேருந்தின் சாரதியும் நடத்துனரும் அம்பாறை பிரிவு ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த பண்டார கஸ்தூரிஆரச்சி அவர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (18) மாலை அம்பாறை பிரதான பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட குறித்த பேருந்து, அம்பாறை நகரின் மையப்பகுதியில் வைத்துப் பொலிஸாரால் இடைமறிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் இறக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையின் போது நடத்துனரிடமிருந்து 5050 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டது.அத்துடன் சாரதியின் இருக்கைக்கு அருகில், முன்பக்க டாஷ்போர்டுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 2050 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டது.
விசாரணைகளில் கைது செய்யப்பட்ட சாரதியே அப்பேருந்தின் உரிமையாளர் என்பது தெரியவந்துள்ளது. இவர் நீண்டகாலமாக கேத்சிரிகம பகுதியில் இத்தகைய கடத்தல்களில் ஈடுபட்டுவந்துள்ளதுடன், ஏற்கனவே போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காகச் சிறைவாசம் அனுபவித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களில் சந்தேகத்திற்குரிய சாரதி கொக்னஹர பகுதியைச் சேர்ந்தவர் எனவும், நடத்துனர் பஹலந்த பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.பொலிஸாரால் பேருந்து கைப்பற்றப்பட்டதால் பயணிகள் மாற்று வாகனங்களில் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுச் சிரமங்களை எதிர்கொண்டனர். இதற்கிடையில், சம்பவம் நடந்த உடனேயே குறித்த பேருந்தின் போக்குவரத்து உரிமத்தை கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து சேவை ரத்து செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட பேருந்தும் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இச்சோதனை நடவடிக்கையானது அம்பாறை மாவட்டபிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவின் பேரில், அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த பண்டார கஸ்தூரிஆரச்சியின் மேற்பார்வையிலும் அம்பாறை பிரிவு 1-ன் உதவி பொலிஸ் அதிகாரி சம்பத் விக்ரமரத்ன வழிநடத்தலில் மாவட்ட குற்றப்பிரிவு பொலிஸ் பரிசோதகர் தனுஷ்க ரத்நாயக்க ஊழல் தடுப்புப் பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் முதித பிரியங்கர ஆகியோரின் தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் கான்ஸ்டபிள்கள் குழுவினர் பங்களிப்பு வழங்கியுள்ளனர்.
நிருபர்
பாறுக் ஷிஹான்
What’s your Reaction?

