யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தற்கொலை உயிரிழப்புகளைத் தடுக்கும் ஒருங்கிணைந்த செயற்றிட்டத்தை வடக்கு மாகாணத்தின் ஏனைய நான்கு மாவட்டங்களிலும் முக்கியத்துவத்துடன் முன்னெடுக்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சு மற்றும் அதன் கீழான திணைக்களங்களின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்றைய தினம் புதன்கிழமை ஆளுநர் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற போதே ஆளுநர் அவ்வாறு வலியுறுத்தினார்.
குறித்த கூட்டத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் தவறான முடிவெடுப்பால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள செயற்றிட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
இவ்விடயத்தின் தீவிரத்தன்மை வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும், குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்திலும் காணப்படுவதாகக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனை கருத்திற்கொண்டு, யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் ஒருங்கிணைந்த செயற்றிட்டத்தை மாதிரியாகக் கொண்டு மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் இதுதொடர்பான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி முன்னெடுக்குமாறு ஆளுநர் பணிப்புரை வழங்கினார்.
அதன் போது, மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் தற்போது உளவளத் துணையாளர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஆளணி இல்லாத நிலை தொடர்பிலும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
இதற்காக புதிய ஆளணி உருவாக்குமாறு முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திடம் கோரிக்கை முன்வைப்பதுடன், வடக்கு மாகாண சபையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகப் பணியாற்றி வரும் துறைசார் கற்கைகளை நிறைவு செய்தவர்களில் பொருத்தமானவர்களைத் தெரிவுசெய்து மருத்துவமனைகளுடன் இணைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், தொடர்புடைய துறையில் பல்கலைக்கழக டிப்ளோமா கற்கையை நிறைவு செய்தவர்களை பயிற்சி அடிப்படையில் உடனடியாக சேவையில் இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டு, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டது.


