இலங்கையில் நாள்தோறும் புதிதாக 17 மார்பகப் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், இந்நோயினால் பாதிக்கப்பட்டு நாளொன்றுக்கு மூவர் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் சமூக விசேட வைத்திய நிபுணர் ஹசரலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தாய்ப்பால் ஊட்டாத தாய்மார்களிடையே மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒக்டோபர் மாதத்தில் அனுஷ்டிக்கப்படும் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டில் 2023ஆம் ஆண்டளவில் சுமார் 6,200 மார்பகப் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்ததாகவும், அவர்களில் 100 பேர் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயம் எனவும் அவர் கூறினார்.
2022ஆம் ஆண்டில் இலங்கையில் சுமார் ஆயிரம் மார்பகப் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், அவர்களில் 36 பேர் உயிரிழந்ததாகவும் தரவுகளை மேற்கோள்காட்டி அவர் தெரிவித்தார்.
மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அதனை நூறு வீதம் குணப்படுத்த முடியும் என விசேட வைத்திய நிபுணர் குறிப்பிட்டார்.
தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலை, யாழ்ப்பாணம், பதுளை, மட்டக்களப்பு, இரத்தினபுரி ஆகிய போதனா வைத்தியசாலைகளிலும், பொலன்னறுவை மற்றும் அக்குரஸ்ஸ ஆகிய வைத்தியசாலைகளிலும் மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான பிரத்தியேக சிகிச்சை நிலையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
பெண்கள் தமது மார்பகப் பகுதியில் கட்டி, ஏதேனும் வலி அல்லது ஏனைய அசாதாரண அறிகுறிகள் தென்படுகின்றனவா என்பது குறித்து மாதத்திற்கு ஒரு முறையாவது சுய பரிசோதனை செய்துகொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
What’s your Reaction?

