திட்டமிடப்பட்ட தமிழின சுத்திகரிப்புக்கும்- தமிழின படுகொலைக்கும் சர்வதேச நீதி கோரி இடம்பெறுகின்ற நான்கு நாள் நீதியின் ஓலம்-02 போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என தாயகச் செயலணி அமைப்பின் வடமாகாண இணைப்பாளர் அருட்தந்தை பொன்னுச்சாமி விஜயதாசன் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
தமிழர்கள் மீது தொடர்ந்து நடைபெறும் இனவழிப்பின் சாட்சியாக யாழ்ப்பாணம் செம்மணியில் அகழ்ந்தெறியப்பட்ட மனித புதைகுழிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட என்புத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி என்பது ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரச பயங்கரவாதத்தால் நடத்தப்பட்ட மனித பேரவலத்தின் சிறு சாட்சியம் மட்டுமே. குறிப்பாக 1996ஆம் ஆண்டில் இலங்கை அரசுப் படையினரால் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 16 வயதுடைய பாடசாலை மாணவியின் வழக்கின் மூலமாகவே இவ்விடயம் வெளிச்சத்துக்கு வந்தது.
இப்படுகொலைக்கு முன்னதாக 1995ஆம் ஆண்டு யாழ்ப்பாண இடம்பெயர்வு காலத்திலும் அதன் பின்னரும் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் உட்பட பல நூற்றுக்கணக்கானோர் மிகக் கொடூரமாக படுகொலை செய்து புதைக்கப்பட்டனர் என்பதனை நிரூபிக்கும் வகையில் கிருசாந்தி படுகொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இலங்கை அரசுப் படைச் சிப்பாயின் பகிரங்க வாக்கு மூலத்தின் அடிப்படையில் 1999ஆம் ஆண்டில் 15 என்புத் தொகுதிகள் மீட்கப்பட்டன. ஆயினும் பின்னர் ஆட்சிக்கு வந்த இலங்கை அரச இயந்திரங்கள் அவற்றை முழுமையாக விசாரணை செய்யாமல் மூடி மறைத்து வந்தன.
கடந்த ஆண்டு அப்பகுதியில் கட்டுமான வேலைக்காக நடைபெற்ற அகழ்வுப் பணியின் போது மனித என்புக் கூடுகள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இவ்விடயத்தை மூடி மறைக்கும் முயற்சிகள் அரசுத் தரப்பால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ் மக்களும் சர்வதேச சமூகமும் மேற்கொண்ட தொடர்ச்சியான அழுத்தங்களின் மூலமே இதுவரை பல எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக 14.08.2026 வெள்ளிக்கிழமை தொடக்கம் 17.08.2026 திங்கட்கிழமை வரை தொடர்ந்து நான்கு நாட்கள் செம்மணியில் ‘நீதியின் குரல் 2’ போராட்டத்தின் வாயிலாக 78 வருடங்களுக்கும் மேலாக தொடரும் திட்டமிட்ட தமிழின சுத்திகரிப்புக்கும் தமிழின படுகொலைக்கும் சர்வதேச நீதி கோரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறும்.
இறுதி நாளான 17.08.2026அன்று மாபெரும் பேரணியும் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இப்போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவினை வழங்க வேண்டும் என மேலும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
What’s your Reaction?

