உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

‘அமரர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம்’ பெறும் தனுஷ்கா..!

danushka to receive amara nilakshan memorial gold medal | Pathivu News

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில், ஊடகக் கற்கைகள் துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற திருகோணமலையைச் சேர்ந்த மாணவி தனுஷ்கா சஞ்ஜீவவிற்கு, ஊடகத்துறையின் உயரிய கௌரவமான ‘அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம்’ வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாளான இன்றைய தினம் புதன்கிழமை இந்த மதிப்பார்ந்த தங்கப் பதக்கம் மாணவி தனுஷ்காவிற்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தில் கல்வி பயின்று, சமூகத்தின் குரலாக ஒலித்த இளம் ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சன். கடந்த 2007ஆம் ஆண்டு ஓகஸ்ட் 1ஆம் திகதி அதிகாலை வேளையில், இராணுவ ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளை, அவரது வீட்டில் வைத்து பெற்றோரின் கண்முன்னாலேயே ஆயுததாரிகளால் கொடூரமாகச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

அன்னாரின் நினைவை என்றென்றும் நிலைநிறுத்தும் உன்னத நோக்கோடு, யாழ். இந்துக் கல்லூரியின் 2004ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களான அவரது சக பாடசாலை நண்பர்களால் “நிலா நிதியம்” உருவாக்கப்பட்டது.

இந்நிதியத்தின் ஊடாக, யாழ். பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்குக் கடந்த எட்டு ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக இத்தங்கப் பதக்கம் வழங்கி வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

விருது வென்ற மாணவி தனுஷ்காவின் ஊடகப் பயணம்:

திருகோணமலை, புனித மரியாள் கல்லூரியின் பழைய மாணவியான தனுஷ்கா சஞ்ஜீவ, 2019 உயர்தரப் பரீட்சையில் திருகோணமலை மாவட்டத்தில் 10ஆம் இடத்தைப் பெற்று யாழ். பல்கலைக்கழகத்தில் நுழைந்தார்.

ஊடகத்துறை மீதான தீராத தாகத்தால் அதனைச் சிறப்புக் கலையாகக் கற்ற அவர், தற்போதைய 43ஆம் அணியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

தனது கற்கை நெறியின் போது, திருகோணமலை விவசாயக் கிராம மக்கள் எதிர்கொள்ளும் யானை-மனித மோதல் தொடர்பான ஆழமான ஆவணப்படத்தைத் தயாரித்தமை மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் செய்தி மற்றும் நிகழ்ச்சிப் பிரிவுகளில் திறம்படப் பணியாற்றியமை போன்ற பல செயன்முறை அனுபவங்களை அவர் தன்னகத்தே கொண்டுள்ளார்.

இவரின் சிறப்பான கல்வித் திறனால், தற்போது ஊடகக் கற்கைகள் துறையிலேயே தற்காலிக உதவி விரிவுரையாளராகப் பணியாற்றும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.

தங்கப் பதக்கம் குறித்து மாணவி தனுஷ்காவின் நெகிழ்ச்சியான பதிவு:

தமக்குக் கிடைத்த இந்த உயரிய விருது குறித்துப் பகிர்ந்துகொண்ட மாணவி தனுஷ்கா சஞ்ஜீவ, தனது உணர்வுகளைப் பின்வருமாறு வெளிப்படுத்தினார்:

“சமூகத்தின் கண்ணாடியாகவும் மக்களின் குரலாகவும் திகழும் ஊடகங்களின் இயல்பையும், அதன் தாக்கத்தையும் எனக்கு ஆழமாகக் கற்றுத்தந்த ஊடகக் கற்கைகள் துறைக்கு முதற்கண் எனது நன்றிகள். விரிவுரையாளர்களின் வழிகாட்டல்களும், ஊடகத் துறைசார் ஆளுமைகளின் அனுபவப் பகிர்வுகளுமே எனது அறிவுப்புலத்தை மேலும் விஸ்தரிக்க உதவின.

“எனது கல்விக்கும், இலட்சியப் பயணத்திற்கும் எப்போதும் உற்ற துணையாக நிற்கும் எனது பெற்றோர் மற்றும் கணவருக்கும், என்னை முன்னகர்த்திய ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் மற்றும் விரிவுரையாளர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றிகள்.

குறிப்பாக, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் அமரர் சகாதேவன் நிலக்சனின் ஞாபகார்த்தமாக வழங்கப்படும் இந்த மதிப்பார்ந்த தங்கப் பதக்கத்திற்கான நிதியத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கி, ஊடகத்துறையில் சாதிக்கும் மாணவர்களைக் கௌரவிப்பதற்குரிய உயர்ந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த ‘நிலா நிதியம்’ குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்றார்.

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊