ஆண்டாள் அவதரித்த திருநட்சத்திரம் என்பதால் வைணவர்களுக்கு மிகவும் முக்கியமான நாள் ஆடிப்பூரம். ஆண்டாள் திருக்கல்யாண உற்சவங்கள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி பாராயணம் போன்றவை நடைபெறும். அம்மன் கோயில்களிலும் ஆடிப்பூரம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
திருவாடிப் பூரத்தின் பெருமை
இந்த ஆண்டு திருவாடிப்பூரம் இன்று14.08.2026, வெள்ளிக்கிழமை வருகிறது. குறிப்பிடத்தக்க வகையில், அன்றே ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையும் அமைந்துள்ளது. இதனால் இந்நாள் பல்வேறு மங்கள அம்சங்கள் ஒன்றிணைந்த அரிய நாளாக விளங்குகிறது. பூரம் நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். சுக்கிரனுக்குரிய கிழமையும் வெள்ளிக்கிழமை. மேலும் சுக்கிரனின் அதிதேவதை ஸ்ரீ மகாலட்சுமி. ஆகவே, பூரம் நட்சத்திரமும், வெள்ளிக்கிழமையும், மகாலட்சுமியின் அருளும் ஒருங்கே சங்கமிக்கும் அரிய திருநாளாக இந்த ஆண்டின் திருவாடிப்பூரம் அமைந்துள்ளது.
ஆண்டாளும் ஆடிப்பூரமும்
ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம், வைணவ சமயத்தில் திருவாடிப் பூரம் எனப் போற்றப்படுகிறது. இது சாதாரண நட்சத்திர நாள் அல்ல; ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் அவதரித்த திருநட்சத்திரம் என்பதால், திவ்ய தேசங்கள் அனைத்திலும் மிகுந்த விமரிசையாகக் கொண்டாடப்படும் மங்கள நாள். பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரான ஆண்டாள், திருவில்லிபுத்தூரில் திருத்துளசிச் செடியின் அடியில் தெய்வக் குழந்தையாக அவதரித்தாள். பெரியாழ்வார் (விஷ்ணுசித்தர்) அந்தத் திருக்குழந்தையைக் கண்டெடுத்து, “கோதை’’ என்று திருநாமம் சூட்டி, பகவத் பக்தியிலும் வேத – தமிழ் மரபிலும் வளர்த்தார். கோதை நாச்சியார் சிறுவயது முதலே ஸ்ரீ மந் நாராயணனையே தம் மணவாளனாக வரித்துக் கொண்டார். எம்பெருமானுக்காகப் பெரியாழ்வார் கட்டிய மலர்களால் ஆன மாலையை முதலில் தாம் அணிந்து பார்த்துவிட்டு, பின்னர் பெருமானுக்குச் சாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இதனை அறிந்த பெரியாழ்வார் வருந்தியபோது, “கோதை சூடிக் கொடுத்த மாலையே எனக்கு உகந்தது’’ என்று எம்பெருமானே அருளிச்செய்தார். அதனால் ஆண்டாள் “சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’’, “ஆண்டாள்’’ என்ற திருநாமங்களைப் பெற்றார். ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை முப்பது பாசுரங்களும், நாச்சியார் திருமொழி நூற்று நாற்பத்து மூன்று பாசுரங்களும் வைணவ சமயத்தின் அரிய பொக்கிஷங்களாக விளங்குகின்றன. திருப்பாவை பக்திக்கும் சரணாகதிக்கும் வழிகாட்டும் வேதசாரமாகத் திகழ்கிறது; நாச்சியார் திருமொழி, பரமபக்தியின் உச்சநிலையை வெளிப்படுத்தும் அருள்நூலாகப் போற்றப்படுகிறது.
இந்த சிறப்பு வேறு நாளுக்கு இல்லை
ஆடிப்பூர நாளின் சிறப்பை மணவாள மாமுனிகள் இப்படிப் பாடுகிறார்;
“இன்றோ திருவாடிப்பூரம் எமக்காக வன்றோ
இங்காண்டாளவதரித்தாள் – குன்றாத
வாழ்வான வைகுந்தவான்போகந்த(ன்)னையிகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய்’’
இன்று திருவாடிப்பூரத் திருநாள்! நம் அனைவருக்கும் அருள் புரிவதற்காகவே ஆண்டாள் இவ்வுலகில் அவதரித்தாள். எக்காலத்தும் குறையாத பேரின்பம் நிறைந்த ஸ்ரீ வைகுண்ட வாழ்வையே பெரிதாக எண்ணாமல், பெரியாழ்வார் திருமகளாக இவ்வுலகில் தோன்றி, நமக்கு பக்தி நெறியையும், சரணாகதி மார்க்கத்தையும் அருளிச் செய்தாள் என்பது இப்பாடலின் பொருள். இந்தத் தனியனில் உள்ள “எமக்காக’’ என்ற ஒரு சொல்லே ஆண்டாளின் அவதார ரகசியத்தை விளக்குகிறது. ஆண்டாள் தன் சொந்த ஆன்மிக உயர்வுக்காக அவதரிக்கவில்லை; நம்மைப் போன்ற சாதாரண ஜீவராசிகளும் இறைவனை அடையும் வழியை அறிய வேண்டும் என்பதற்காகவே அவதரித்தாள்.
எனவே, திருவாடிப்பூரம் என்பது ஆண்டாளின் பிறந்தநாள் மட்டுமல்ல; நமக்காகவே இறைவன் அருளிய தெய்வீகக் கொடை என்பதை இந்தத் தனியன் சுருக்கமாகவும் செறிவாகவும் எடுத்துரைக்கிறது.
What’s your Reaction?

