கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டாவது கடற்றொழில் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றைய தினம்(12.08.2026) கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பங்கேற்றதுடன், பல்வேறு விடயங்கள் தொடர்பில் துறை சார்ந்தவர்களுடன் கலந்துரையாடியதோடு, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் பல விடயங்களை முன்வைத்திருந்தார்.
குறிப்பாக, தட்டுவன்கொட்டி பகுதியில் மக்களின் வாழ்வாதாரக் காணிகள் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் உரிய தீர்வினை வழங்குமாறு வலியுறுத்திய நிலையில், அதற்கு ஒரு வார காலத்திற்குள் உடனடித் தீர்வு எட்டப்படும் என அமைச்சரினால் உறுதியளிக்கப்பட்டது.
அதேபோன்று இரணைமடு நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்கள், சாந்தபுரம் பகுதி மீனவர்கள், பள்ளிக்குடா மீனவ உறவுகள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர்களினால் பதிலளிக்கப்பட்டதுடன், அவற்றுக்கான தீர்வுகள் விரைவாக வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.
கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே.கோலித கமல் ஜினதாச, மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

What’s your Reaction?

