“வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற தொனிப்பொருளிலான தொலைநோக்கு அபிவிருத்தி பார்வையின் கீழ், யாழ்ப்பாணம் மாவட்டத்தின் காரைநகர் மக்களின் நீண்டகால தேவையாக இருந்த காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகள் நேற்று (15.03.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.
117.04 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படும் இந்த அபிவிருத்தித் திட்டம், காரைநகர் பிரதேச மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதுடன், பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது.
மொத்தம் 7 கிலோமீற்றர் நீளமுடைய காரைநகர் சுற்றுவட்ட வீதியில் ஏற்கனவே 2 கிலோமீற்றர் வீதி புனரமைக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய பகுதிகளில் இருந்து 2 கிலோமீற்றர் நீளமுடைய வீதியின் புனரமைப்புப் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன.
மேலும் எஞ்சியுள்ள 3 கிலோமீற்றர் வீதி “டித்வா” மீள்கட்டுமானத் திட்டத்தின் கீழ் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு, இந்த ஆண்டுக்குள் முழுமையாக புனரமைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தப் புனரமைப்புப் பணிகளின் போது முறையான வடிகால் அமைப்புகள் ஏற்படுத்தப்படுவதுடன், தாழ்வான பகுதிகளில் வீதி உயர்த்தப்பட்டு நீண்டகால பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மேம்படுத்தப்படவுள்ளது.
இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் ,மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான க. இளங்குமரன், எஸ். ஸ்ரீபவானந்தராஜா, ஜெ. ரஜீவன் ஆகியோருடன் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர், காரைநகர் பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர், மாவட்ட பிரதம பொறியியலாளர், பிரதேச சபை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

