முக்கிய செய்திகள் புதியவை

ஜனாதிபதியின் கடமைகளை ‘அதிகாரபூர்வமானவை’, ‘தனிப்பட்டவை’ என வகைப்படுத்த முடியாது..!

e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4e0aebfe0aeafe0aebfe0aea9e0af8d e0ae95e0ae9fe0aeaee0af88e0ae95e0aeb3e0af88 e0ae85e0aea4 | Pathivu News

ஜனாதிபதி ஒருவரின் கடமைகளை ‘அதிகாரபூர்வமானவை’ மற்றும் ‘தனிப்பட்டவை’ என வகைப்படுத்த முடியாது எனவும், அவர் பதவி வகிக்கும் காலம் முழுவதும் 24 மணிநேரமும் ஜனாதிபதியாகவே கருதப்படுவார் எனவும் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர்,

ஜனாதிபதி ஒருவரின் பணிகள் மற்றும் அவரது தனிப்பட்ட செயல்பாடுகளுக்கு இடையே வேறுபாடு உள்ளதா என்பது குறித்து இன்று நாட்டில் ஒரு விவாதம் எழுந்துள்ளது. இது முற்றிலும் ஒரு மாயையாகும். அத்தகைய வேறுபாடு எப்போதுமே கிடையாது. இது நாம் செயற்கையாக உருவாக்கிக் கொண்ட ஒரு பிம்பமாகும்.

ஒருவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றது முதல், அந்தப் பதவியில் இருக்கும் வரை வாரத்தின் ஏழு நாட்களும், 24 மணிநேரமும் அவர் ஜனாதிபதியே. அவர் எங்கு சென்றாலும், எத்தகைய செயலில் ஈடுபட்டாலும் அது உள்நாடாகவோ அல்லது வெளிநாடாகவோ இருந்தாலும் அவருக்குப் பாதுகாப்பு வழங்குவது அரசின் கட்டாயப் பொறுப்பாகும்.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் முதல் தடவை பதவி வகித்தபோது கோல்ஃப் விளையாடுவதற்காக ஸ்கொட்லாந்து சென்றபோது, அது அவரது தனிப்பட்ட வேலை எனக்கூறி பாதுகாப்பு மறுக்கப்படவில்லை. அவருக்கு 24 மணிநேரமும் பாதுகாப்பு வழங்கப்பட்டது, அது வழங்கப்படவும் வேண்டும்.

பாதுகாப்புடன் தொடர்புடைய மேலும் சில விடயங்கள் உள்ளன. குறிப்பாகப் போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகள். ஒரு ஜனாதிபதி பாதுகாப்பு காரணங்களுக்காகச் சாதாரண வாடகை வாகனங்களில் பயணம் செய்ய முடியாது. எனவே, முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகள் அவருக்கு வழங்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி கடற்கரையில் உடற்பயிற்சி செய்தாலும், மத வழிபாடுகளில் ஈடுபட்டாலும் அல்லது உறவினர் ஒருவரின் பிறந்தநாள் விழாவிற்குச் சென்றாலும் அவர் ஜனாதிபதியாகவே கருதப்படுவார்.

அதேபோல, ஒரு பல்கலைக்கழகம் அல்லது சர்வதேச அமைப்பு ஒன்றின் அழைப்பை ஏற்றுச் சென்றாலும், அவர் அங்கு ஜனாதிபதியாகவே முன்னிலையாவார்.

சர்வதேச சட்டம் மற்றும் மரபுகளின்படி இத்தகைய பிரிவினை கிடையாது என்பதை நான் தெளிவாகக் கூறுகிறேன். தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தாமல், இந்த விடயத்தை தர்க்கரீதியான அடிப்படையில் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” எனப் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் சுட்டிக்காட்டினார்.

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊