குழந்தை பாலியல் பலாத்காரம் குற்றச்சாட்டில் பிரான்ஸ் அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த இலங்கையர் உட்பட மனிதக் கடத்தல் மற்றும் சட்டவிரோத குடியேற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஏழு பேர் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்டர்போல் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற உலகளாவிய நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே,இந்த 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள குழந்தை பாலியல் பலாத்காரம் குற்றச்சாட்டில் பிரான்ஸ் அதிகாரிகளால் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தின் தேசிய குற்றவியல் நிறுவனம் தலைமையில் ‘ஆப்பரேஷன் லிபர்டெரா 3 ( திரி)’ என்ற பெயரில் நடைபெற்ற இந்த நடவடிக்கை, சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தும் பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகளில் தேடப்பட்டவர்களை குறிவைத்து முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களில், பிரான்சில் குழந்தை பாலியல் பலாத்காரம் குற்றச்சாட்டில் தேடப்பட்ட 30 வயதான இலங்கையர், ஜெர்மனியில் பாலியல் பலாத்காரம் குற்றச்சாட்டில் தேடப்பட்ட ஈராக் நாட்டு நபர், பிரான்சில் கொலை குற்றச்சாட்டில் தேடப்பட்ட எகிப்தியர், ஜெர்மனியில் சட்டவிரோத சிறிய படகு கடத்தலை ஒருங்கிணைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட சிரியர் மற்றும் மனிதக் கடத்தல் குற்றச்சாட்டில் தேடப்பட்ட பல்கேரியர் ஆகியோர் அடங்குவர்.
கூடுதலாக, பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டில் தேடப்பட்ட உக்ரைனியர் மற்றும் ருமேனியர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
ஏழு சந்தேகநபர்களையும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு ஒப்படைக்கும் சட்ட நடைமுறைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த உலகளாவிய நடவடிக்கையின் போது மொத்தம் 3,744 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 1,800 பேர் மனிதக் கடத்தல் மற்றும் குடியேற்றக் கடத்தல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
