முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான விசாரணைகளில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சட்ட நடைமுறைகளை மீறிச் செயல்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நிராகரித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்திற்கு மேற்கொண்ட பயணத்தின் போது, சுமார் 1.66 கோடி முதல் 1.69 கோடி ரூபாய் வரையிலான அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் முறைப்பாடு குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வொல்வர் ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க கௌரவப் பட்டம் பெற்ற நிகழ்வானது ஒரு தனிப்பட்ட விஜயமாக இருந்தும், அதற்கு அரச நிதி பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்தே இந்த விசாரணை கவனம் செலுத்துகிறது.
கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு, பின்னர் மருத்துவ காரணங்களுக்காக பிணையில் விடுவிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க இக்குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வருகிறார்.
ஹவானாவில் நடைபெற்ற ஜி 77 உச்சிமாநாட்டைத் தொடர்ந்தே இந்த விஜயம் உத்தியோகபூர்வமாக அமைந்ததாகவும், பேராசிரியரின் பயணச் செலவுகள் தனிப்பட்ட ரீதியில் ஈடுசெய்யப்பட்டதாகவும் அவரது அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.
எனினும், பல்கலைக்கழக அழைப்பிதழின் உண்மைத்தன்மை குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுக்கும் விசாரணைகள் குறைபாடுகள் கொண்டவை என ரணில் விக்கிரமசிங்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகளான திலக் மாரப்பன மற்றும் அனுஜ பிரேமரத்ன நீதிமன்றில் வாதிட்டனர்.
குறிப்பாக, வெளிநாடுகளில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான பரஸ்பர சட்ட உதவிச் சட்டத்தைப் பயன்படுத்தாமல், சிஐடியினர் சட்ட நடைமுறைகளைத் தவிர்த்துள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தினர்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அமைச்சர் ஆனந்த விஜேபால, விசாரணைகளை முன்னெடுப்பதில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சுயாதீன அதிகாரம் உள்ளதாகவும், ஒவ்வொரு கட்டத்திலும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேற்பார்வை அவசியமில்லை என்றும் குறிப்பிட்டார்.
இந்த விசாரணை 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
அதேவேளை, இறுதித் தீர்மானத்தை நீதிமன்றமே எடுக்கும் என்றும், சட்ட நடைமுறைகள் மீறப்பட்டிருந்தால் அதனை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
பல்கலைக்கழக அழைப்பிதழ் தொடர்பான இறுதி முன்னேற்ற அறிக்கையை அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
