ஆளும் கூட்டணியாக உள்ள ஜனதா விமுக்தி பெரமுனா மற்றும் அதன் அரசியல் வாகனமான தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றுக்குள் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் இப்போது ஊக நிலையைத் தாண்டி வெளிப்படையான பிளவுகளாக உருவெடுத்துள்ளன.
அரசின் உள்பகுதியில் நிலவும் ஆழமான கருத்தியல் ரீதியான முரண்பாடுகள் தெளிவாக வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்னெடுத்துள்ள கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பான கடும் சர்ச்சைகளே இந்த உடைவின் மிகத் தெளிவான வெளிப்பாடாக அமைந்துள்ளன.
சமீபத்தில் பாராளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சியினர் தன்னை எதிர்த்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரத் தேவையில்லை என்றும், மக்கள் மாற்றம் தேவை எனத் தீர்மானிக்கும் தருணத்தில் தாம் பதவியைவிட்டு வீட்டிற்குச் செல்லத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தப் பேச்சு அதன் வெளிப்படைத்தன்மைக்காக மட்டுமல்ல, ஜனநாயகப் பொறுப்புணர்வு குறித்து அவர் கொண்டுள்ள பார்வையையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.
ஆனால் இதே வேளையில், ஆளும் கூட்டணியின் பிற பகுதிகளிலிருந்து எழும் உரைகள், அதிகாரத்தை மக்களால் தற்காலிகமாக வழங்கப்படும் பொறுப்பாக அல்லாது, எந்த விலையையும் கொடுத்து பாதுகாக்க வேண்டிய உரிமையாகப் பார்க்கும் மனப்பாங்கை வெளிப்படுத்துகின்றன.
இந்த மாறுபாடு தற்செயலானதல்ல. நாட்டின் முன் தற்போது உருவெடுத்து வரும் ஆட்சிக் கோட்பாட்டின் மையத்தையே இது தொடுகிறது.
நிர்வாகத்தின் ஒரு பகுதி, குறைந்தபட்சமாக உரைநிலையில் ஜனநாயக சம்மதத்தையும் அதிகாரத்தின் தற்காலிக தன்மையையும் ஏற்றுக்கொள்வது போல் தெரிந்தாலும், மற்றொரு பகுதி அதிகாரபூர்வ அரசியல் ஆய்வாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் அதிகாரவாத மொழியைப் பயன்படுத்துகிறது.
நிறைவேற்று அதிகாரத்துடன் கூடிய ஜனாதிபதி முறை இருந்தும் அரசை கட்டுப்படுத்துவது போதாது என்றும், ‘முழு அரசைக் கட்டுப்படுத்துதல்’ தேவை என்றும் மூத்த அரசியல் தலைவர்கள் பொதுவெளியில் பேசத் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் வட்டாரமெங்கும் எச்சரிக்கை மணி ஒலிக்க வேண்டிய தருணம் இது.
இந்தக் கருத்துக்களை மேலும் கவலைக்கிடமாக மாற்றும் வகையில், ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள ‘ஆயிரக்கணக்கானவர்களைக் கொல்வதும் நியாயமானது’ எனக் கூறியிருப்பது, இவை தனிப்பட்ட பேச்சுகள் அல்ல் மாறாக, ஆபத்தான ஒரு சிந்தனைப் போக்கின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகின்றன.
இவ்வாறான உரைகளை வெறும் வீரச்சொற்கள் அல்லது கருத்தியல் மிகை என புறக்கணிப்பது மிகப்பெரிய தவறாகும்.
அதிகாரம் செலுத்தும் இடத்தில் இருப்பவர்களின் சொற்கள் மிக முக்கியமானவை. வரலாறு காட்டுவது போல, ஜனநாயகங்கள் ஒரே இரவில் சிதைவடைவதில்லை; தீவிரமான பேச்சுகள் மெதுவாக சாதாரணமாக்கப்படுவதாலும், சுயாதீன நிறுவனங்கள் படிப்படியாக பலவீனப்படுத்தப்படுவதாலும் அவை உள்ளிருந்து சிதைகின்றன.
வடகொரியா, சீனா, கியூபா அல்லது இன்றைய ரஷ்யா போன்ற ஒருகட்சி ஆட்சிகளுடன் இப்போது ஒப்பீடுகள் முன்வைக்கப்படுவது சிலருக்கு வெளிப்படையாகத் தோன்றுகின்றது.
இந்தப் போக்குகளில் முக்கியமானது, அரசியல் ஆட்சி மற்றும் அரசின் நிரந்தர நிறுவனங்கள் என்ற அரசியலமைப்புச் சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட வேறுபாடு மெதுவாக அழிக்கப்பட்டு வருவதாகும்.
இலங்கையின் அரசியலமைப்பு குறைபாடுகள் இருந்தாலும், அரசுகள் தற்காலிக அதிகாரப் பாதுகாவலர்கள் என்றும், அரசுப் பணித்துறை, நீதித்துறை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஆகியவை குடியரசின் நிரந்தர காவலாளர்கள் என்ற அடிப்படை கோட்பாட்டில் அது அமைந்துள்ளது.
கொள்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் உருவாக்கப்பட வேண்டும்; ஆனால் அவை கட்சி தலையீட்டிலிருந்து பாதுகாக்கப்பட்ட தொழில்முறை நிர்வாகத்தால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே அதன் நோக்கம்.
இன்று நாம் காண்பது இந்தப் பிரிவின் திட்டமிட்ட சிதைவாகும். இதுவரை கோட்பாடுகளாக பேசப்பட்ட ‘அரசு கைப்பற்றல்’ நடைமுறையில் பலமாக முன்னேறியுள்ளதாகத் தெரிகிறது.
பொருள்துறை, காவல்துறை மற்றும் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு போன்ற முக்கிய நிறுவனங்களில் கட்சி ஆதரவாளர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர்.
இப்போது, சட்ட ஆட்சி பாதுகாப்பின் முக்கிய தூணாகக் கருதப்படும் சட்ட மா அதிபர் திணைக்களம் கூட ஆளும் கட்சியின் அரசியல் முன்னுரிமைகளுக்கு இணங்க அழுத்தங்களுக்கு உள்ளாகி வருவதாகப் பாரப்படுகின்றது.
கடந்த எட்டு மாதங்களாக கணக்காயர் நாயகம் நியமிக்கப்படாதிருப்பதும் இந்தக் கவலைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
கணக்காயர் நாயகம் ஒரு சடங்கு பதவியாளர் அல்ல் அரசுப் பணம் தொடர்பான பாராளுமன்ற கண்காணிப்பின் மையப் பொறுப்பே அந்த அலுவலகம்.
அதன் செயலிழப்பு, அரசுச் செலவுகளை கண்காணிக்கும் ஊழுPநு, ஊழுPயு போன்ற முக்கிய பாராளுமன்றக் குழுக்களின் செயல்பாடுகளை கடுமையாக பாதித்துள்ளது.
ஊழல் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ள சூழலில், செயல்படும் கணக்காயர் நாயகம் இல்லாத நிலை மிகவும் அபாயகரமானதாகும்.
இந்தப் பின்னணியில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தூதரக சமூகத்தையும் பல்துறைக் நிறுவனங்களையும் நேரடியாக எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறான நடவடிக்கை அவசியமானதாகக் கருதப்பட்டதே நிலைமையின் தீவிரத்தைக் காட்டுகிறது. சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மீது தேவையற்ற அழுத்தங்கள், முக்கிய கண்காணிப்பு அமைப்புகளை அரசியலாக்கும் முயற்சிகள் மற்றும் சுயாதீன நிறுவனங்களை ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயலும் விரிவான திட்டம் குறித்து பலர் மாதங்களாக கவனித்துவருவதை அந்த தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
சமீப காலத்தில், எதிரிகள் என கருதப்படுபவர்களை, அவர்கள் சமூக நிலையில் உயர்ந்தவர்களாக இருந்தாலும், தேசிய உடை அல்லது காவிய ஆடையில் இருந்தாலும், ‘திருப்பித் தாக்கத் தயங்க மாட்டோம்’ என பொது உரைகள் வெளியாகியிருப்பது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய மொழி, வருத்தமின்றி பயன்படுத்தப்படுவது, கருத்து வேறுபாட்டை ஜனநாயகத்தின் அங்கமாக அல்லாது அழிக்க வேண்டிய எதிரியாகப் பார்க்கும் மனநிலையை வெளிப்படுத்துகிறது.
சட்ட மா அதிபர் பரிந்த ரணசிங்கவை குறிவைத்து நடத்தப்பட்ட சமூக ஊடகப் பிரச்சாரம் இந்த அச்சங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
நீதிமன்றங்களின் முன்பும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் முன்பும் நடைபெற்ற அமைதிப் போராட்டங்கள் மற்றும் இணையவழி தாக்குதல்கள், அந்த அலுவலகத்தை அச்சுறுத்த அல்லது மதிப்பிழக்கச் செய்யும் ஒருங்கிணைந்த முயற்சியின் பகுதியாகவே பார்க்கப்படுகின்றன.
கட்சி செயற்பாட்டாளர்களின் வலையமைப்பு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து கீழ்ப்படிதலை உறுதி செய்ய முயல்கிறது என எதிர்க்கட்சியும் குடிமக்கள் அமைப்புகளும் குற்றம் சாட்டுகின்றன.
இந்த நிலையில், இலங்கை வழக்கறிஞர் சங்கத்தின் தலையீடு நேரத்துக்கேற்றதும் முக்கியமானதுமாகும்.
சமூக ஊடகத் தாக்குதல்கள் சட்ட மா அதிபர் அலுவலகத்தின் சுயாதீனத்தில் நியாயமற்ற தலையீடாகும் என்ற அதன் எச்சரிக்கை எளிதில் புறக்கணிக்க முடியாததாகும்.
குற்றவியல் வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது அல்லது வழக்குத் தொடர்வது போன்ற முடிவுகள் ஆதாரங்கள், அவற்றின் ஏற்றத்தக்க தன்மை மற்றும் தண்டனை பெறும் சாத்தியம் ஆகியவற்றின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும்; பொது மனநிலையோ அரசியல் வசதியோ அதன் அடிப்படை ஆக முடியாது.
இந்த முடிவுகள் நீதிமன்ற மறுஆய்வுக்கு உட்பட்டவையே. அரசியலமைப்பு வழங்கும் பாதுகாப்பு இதுவே. இதை கூட்ட அழுத்தங்களாலும் ஒருங்கிணைந்த பிரச்சாரங்களாலும் சிதைப்பது சட்ட ஆட்சியின்மீது நேரடியான தாக்குதலாகும்.
இந்த சர்ச்சைக்கு அரசின் பதில் தெளிவற்றதாகவே உள்ளது. சட்ட மா அதிபரை நீக்குவது அல்லது பதவி நீக்கம் செய்வது குறித்து அமைச்சரவையில் எந்த விவாதமும் இல்லை என நீதியமைச்சர் தெரிவித்திருந்தாலும், தாக்குதல்கள் தீவிரமடைந்தபோது அரசின் மௌனம், முன்பு தங்கள் உறுப்பினர்கள் சமூக ஊடக விமர்சனங்களுக்கு உள்ளானபோது வெளிப்படுத்திய கடும் எதிர்வினையுடன் ஒப்பிடுகையில் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. இந்தத் தேர்ந்தெடுத்த கோபம், அரசின் நடுநிலைக் கோரிக்கைகளை பலவீனப்படுத்தியுள்ளது.
எனினும், இந்த இருண்ட சூழ்நிலையில் ஒரு முக்கியமான நம்பிக்கையும் உள்ளது. இலங்கை மக்கள் பெரும்பாலும் தங்கள் ஜனநாயக சுதந்திரங்களை மதிக்கிறார்கள். 2015 ஆம் ஆண்டு ராஜபக்ச நிர்வாகத்தின் தோல்வி பொருளாதார காரணங்களால் மட்டும் அல்ல் ஊழல், தண்டனையின்மை மற்றும் நல்லாட்சியின் சிதைவுக்கு எதிரான மக்கள் நிராகரிப்பே அதன் அடிப்படை. வரலாறு இங்கு எச்சரிக்கையையும் பாடத்தையும் வழங்குகிறது.
தற்போதைய அரசு ‘முறைமாற்றம்’ என்ற வாக்குறுதியின் பேரிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டது; ‘அரசு கைப்பற்றல்’ அதில் இல்லை. ஊழல்மிக்க நிர்வாகத்தை சீர்திருத்துவது என்றால், அதற்கு பதிலாக கட்சிசார்ந்த நிர்வாகத்தை நிறுவுவது அல்ல. சுதந்திரத்திற்குப் பிந்தைய ஒவ்வொரு அரசும், முந்தைய ஆட்சிகள் நியமித்த அதிகாரிகளுடன் பணியாற்றியே வந்துள்ளது. இது அமைப்பின் குறைபாடு அல்ல் தொடர்ச்சியையும் நிறுவன அனுபவத்தையும் உறுதி செய்ய உருவாக்கப்பட்ட அம்சம். உண்மையான சீர்திருத்தம் கொள்கைகள், நடைமுறைகள் மற்றும் ஊக்குவிப்புகளை மாற்றுவதில்தான் உள்ளது; ஒவ்வொரு முக்கிய பதவியிலும் விசுவாசிகளை நியமிப்பதில் அல்ல.
இறுதியில், அரசு மற்றும் அரசு இயந்திரம் என்ற வேறுபாடு எந்த விலையையும் கொடுத்து பாதுகாக்கப்பட வேண்டும். அரசு தற்காலிக பொறுப்பாளர்; அரசு இயந்திரம் நிரந்தரமானது. இவ்விரண்டையும் குழப்புவது அல்லது திட்டமிட்டு ஒன்றாகக் கரைப்பது அதிகாரவாதத்திற்கான மிகக் குறுகிய பாதையாகும். ‘அரசை கைப்பற்றுதல்’ என்ற பேச்சு, ஜனநாயக ஆட்சியைப் பற்றிய அடிப்படை புரிதல் இல்லாமையையோ அல்லது அதனை நிராகரிப்பதையோ வெளிப்படுத்துகிறது.
இந்தச் சம்பவங்கள், ஒன்றுபட்ட மாற்றத்தின் பேச்சின் கீழ் நீண்ட காலமாக மறைக்கப்பட்டிருந்த NPP மற்றும் துஏP இடையிலான பிளவுகளை வெளிக்கொண்டு வந்துள்ளன. பிரதமர் எதிர்க்கட்சியின் சவால் திறனை கேலி செய்தாலும், ஒரு அரசின் விதியை தீர்மானிப்பது எதிர்க்கட்சி அல்ல் மக்கள் தான். வரலாறு வழிகாட்டியாக இருந்தால், எந்த அளவுக்கு புரட்சிகரமாக அலங்கரிக்கப்பட்டிருந்தாலும், அதிகாரவாதத்தை இலங்கை மக்கள் நிராகரிப்பதில் தொடர்ந்து ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். இறுதியில், அதிகாரத்தை நிரந்தரமாகக் கருதியவர்கள்தான் ஏமாந்தவர்களாக முடிவடைவார்கள் என்பதே இந்த ஆட்சியும் உணர வேண்டிய உண்மை.

