சமூக சேவைகள் திணைக்களமும் (மத்திய) முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய முல்லைத்தீவு மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டி நேற்றைய தினம்(21) மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் கரைதுறைப்பற்று பிரதேசசபை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து சமூக சேவை உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகள் முன்நூற்றி ஐம்பது பேர் கலந்துகொண்டனர்.
மாற்றுத்திறனாளிகளின் உடல் உள ஆரோக்கியத்தைப் பேணிடவும் திறமையானவர்களை இனங்கண்டு மாகாண மற்றும் தேசிய போட்டிகளில் பங்குபெறச் செய்து சர்வதேச அளவில் சாதனையாளரை உருவாக்கிடும் நோக்கில் குறித்த போட்டியானது நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த போட்டி நிகழ்வில் கலந்து சிறப்பித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் வெற்றிபெற்ற வீர வீராங்கனைகளுக்கு பரிசில்களும் வழங்கிக் கௌரவித்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட திருமதி.எஸ்.மஞ்சுளாதேவி(நிர்வாகம்),மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.ஜெயக்காந்(காணி)பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், சமூக சேவை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக ஏனைய உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


