இந்த மாதம் நாடு முழுவதும் உள்ள 44 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு இலவச பாடசாலை சீருடைகள் வழங்கப்படவுள்ளதாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்முறை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், அரச மற்றும் அரசு உதவி பெறும் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுடன், அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் கல்வி கற்கும் பிக்குகள் மற்றும் பொதுமாணவர்களும் உள்ளடக்கப்படுவார்கள் என அமைச்சு தெரிவித்துள்ளது.
இலவச சீருடை வழங்கும் இந்தத் திட்டம், சீன மக்கள் குடியரசு வழங்கிய 11.484 மில்லியன் மீட்டர் சீருடைத் துணி முழுமையான நன்கொடையாக கிடைத்ததன் மூலம் சாத்தியமானதாகியுள்ளது.
இந்த நன்கொடைக்குரிய அனைத்து துணி பொதிகளும் ஏற்கனவே துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளன எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நன்கொடையை உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு, எதிர்வரும் 13ஆம் திகதி கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்முறை கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெறவுள்ளது.
