டிட்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட பேரிடர் நிலைமையை முன்னிட்டு, 15 சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்திருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டதுடன், ஜனாதிபதியின் செயலாளர் என். எஸ். குமாநாயக்கவினால் கையொப்பமிடப்பட்டுள்ளது.
அதன்படி, மின்சாரம், எரிபொருள், சுகாதார சேவைகள், போக்குவரத்து, வீதிகள்;, குடிநீர் வழங்கல், உணவுச் சேவைகள், மாவட்டச் செயலாளர் அலுவலகங்கள், பிரதேசச் செயலாளர் அலுவலகங்கள் மற்றும் கள அதிகாரிகள், ஆம்புலன்ஸ் சேவைகள், மத்திய வங்கி, அரச வங்கிகள் மற்றும் காப்புறுதி சேவைகள், நீர்ப்பாசனம், தொலைபேசி மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள், ஊடக சேவைகள், தாழ்நிலப் பகுதிகள் மீட்பு, விவசாயம் மற்றும் விவசாய காப்புறுதி சேவைகள் ஆகியவை அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பேரிடர் நிலைமையை முன்னிட்டு பொதுமக்களுக்கு அவசியமான சேவைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கடந்த நவம்பர் 29ஆம் திகதி முதன்முறையாக இந்த அத்தியாவசிய சேவைகள் வர்த்தமானியை வெளியிட்டிருந்தார்.
டிட்வா சூறாவளியின் தொடர்ச்சியான தாக்கத்தை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் இயல்பான வாழ்வையும் முக்கிய சேவைகளின் தொடர்ச்சியையும் பாதுகாக்க கூடுதல் சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
