இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகளுக்காகக் கிடைக்கப்பெறும் பில்லியன் கணக்கான ரூபாய்களை நிர்வகிப்பதற்கும் முறைப்படுத்துவதற்குமாக ‘ஸ்ரீலங்கா மறுசீரமைப்பு நிதியத்தை’ முறையாக நிறுவுவதற்கான புதிய நாடாளுமன்றச் சட்டமூலம் ஒன்றினை அரசாங்கம் தற்போது வரைந்து வருகின்றது.
இந்த நிதியத்திற்கு ஒரு சட்டப்பூர்வமான கட்டமைப்பை வழங்குவதே இதன் பிரதான நோக்கமாகும். புதிய சட்டம் இயற்றப்படும் வரை, அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட விசேட இடைக்கால பொறிமுறையின் கீழ், திறைசேரியின் பிரத்யேகக் கணக்குகளின் ஊடாக இந்த நிதியம் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அப்புன்சு இது குறித்து விளக்கமளிக்கையில், மறுசீரமைப்பு என்ற பொதுவான கருப்பொருளை ஒழுங்குபடுத்த முடியாது என்றாலும், ஸ்ரீலங்கா மறுசீரமைப்பு நிதியமானது குறிப்பிட்ட சட்டத்தினால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
இதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்கும் பணிகளில் அதிகாரிகள் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சட்டப்பூர்வமான கட்டமைப்பு உருவாகும் வரை, நன்கொடையாளர் நிதியைக் கையாள்வதற்காக திறைசேரியின் பிரதிச் செயலாளரின் நேரடி நிர்வாகத்தின் கீழ் வெளிப்படையான இடைக்கால அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்வதில் தாமதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டே, சட்டப்பூர்வமான நிதியம் முறையாக நிறுவப்படும் வரை திறைசேரி கணக்குகளைப் பயன்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கென ஏற்கனவே எட்டு விசேட கணக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய வங்கியின் ஊடாக நிர்வகிக்கப்படும் வெளிநாட்டு நன்கொடைகளுக்கான ஆறு கணக்குகளும், மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கியில் உள்ளூர் நாணய நன்கொடைகளுக்காக இரண்டு கணக்குகளும் இதில் அடங்கும்.
இந்த நிதிகள் அனைத்தும் அரச நிதிச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே கையாளப்படுவதாக அப்புன்சு உறுதிப்படத் தெரிவித்தார்.
இந்த நிதியம் வெறும் பணப்பங்களிப்புகளைப் பெற்றுக்கொள்வதோடு மட்டுமன்றி, காணி மற்றும் ஏனைய பௌதீகச் சொத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வீடமைப்புத் திட்டங்கள் போன்ற மறுசீரமைப்புப் பணிகளுக்குத் தேவையான நிலம் மற்றும் கட்டுமானப் பொருட்களை வழங்குவதற்கும் சில தனிநபர்கள் ஏற்கனவே முன்வந்துள்ளனர்.
இதற்காக பிரத்யேகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள டிஜிட்டல் தளத்தில் இத்தகைய பங்களிப்புகளை வகைப்படுத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த விசேட சட்டமூலத்தின் ஊடாக நீண்டகால ரீதியில் நன்கொடையாளர்களின் நம்பிக்கையைப் பெற அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. குறிப்பாக, இந்தியாவின் 450 மில்லியன் டொலர் நிதியுதவி உட்பட பெருமளவிலான வெளிநாட்டு உதவிகள் சட்டப்பூர்வமான பொறுப்புக்கூறலுடன் நிர்வகிக்கப்படுவதை இந்த புதிய சட்டம் உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
