உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மாகாண சபைகளுக்கான தேர்தல் மக்களுக்கா? அரசியல்வாதிகளுக்கா?

வடக்கு கிழக்குக்காக இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் புகுத்தப்பட்ட
மாகாண சபை முறைமை இலங்கை அரசால் மட்டுமன்றி இந்தியாவாலும்கூட வேண்டப்படாத ஒன்றாகவே காணப்படுகிறது. ஆனால், மாகாண சபைத் தேர்தலை தமிழ்த் தேசிய கட்சிகள் முக்கியமாக தமிழரசுக் கட்சி நாளும் பொழுதும் வேண்டி வருகிறது. இதற்காக தாயகத் தமிழ் மக்களை இணைத்து வெகுஜனப் போராட்டம் ஒன்றை நடத்தும் வலிமை இவர்களிடம் உள்ளதா? இதற்கு விடை காணப்படாதவரை மாகாண சபைத் தேர்தல் மக்களுக்கானதா அல்லது அரசியல்வாதிகளுக்கானதா என்ற கேள்வி தொடர்ந்தவாறே இருக்கும்.
ஊழல் ஒழிப்பு என்பதை தாரக மந்திரமாக முன்னிறுத்தி தேர்தலை சந்தித்த தேசிய மக்கள் சக்தி இப்போது அதனை செயற்படுத்த ஆரம்பித்துள்ளது. ஏழு தசாப்தங்களாக ஊழலில் ஊறிப்போன குட்டித்தீவை எடுத்த எடுப்பில் அதிலிருந்து நீக்கிவிட முடியாது.

அநுர குமர திஸ்ஸநாயக்க தலைமையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்ததும், முன்னைய ஆட்சிக் காலங்களில் ஊழலில் ஊறிப்போயிருந்தவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமென்று எதிர்பார்த்தனர். அப்படி எதுவும் நடைபெறவில்லை. அதனையே தமது பலமாகக் காட்டி தம்மை ஊழலற்றவர்கள் என்று படங்காட்ட முனைந்தவர்கள் – வெளிநாட்டில் பதுக்கிய பணத்தை மீட்டு விட்டீர்களா, துணிவிருந்தால் சொன்னதை செய்யுங்கள் என்று ஆட்சித் தரப்பைப் பார்த்து சவால் விட ஆரம்பித்தனர்.

இவ்வாறு சவால் விட்டவர்களில் முக்கியமானவர் மகிந்தவின் புதல்வரான நாமல் ராஜபக்ச. அநுர குமர தரப்பு ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளை எடுப்பதில் கரிசனை காட்ட முனைந்தபோது ராஜபக்சக்கள் நிலைகுலைந்தனர். இவர்கள் அனைவருமே இன்று ஏதோ ஒரு ஊழல் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளனர்.

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான சுரேஸ் சாலேயை 90 நாட்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்க ஜனாதிபதி என்ற பதவி வழியாக அநுர குமர உத்தரவிட்டதன் பின்னரே கிணறு வெட்ட பூதம் கிளம்பியதுபோல் முன்னாள் அரசியல்வாதிகள் பலர் திகிலடைந்தனர். கோதபாய, பசில் போன்ற மகிந்தவின் உடன்பிறப்புகள் மீது ஊழல் சட்டம் பாய ஆரம்பித்துள்ளது.

அது தனது கடமையைச் செய்வதை பொறுக்க முடியாத சிலர், அரசியல் எதிரிகளை ஓரங்கட்ட சட்டம் பயன்படுத்தப்படுகின்றது என்கின்றனர். சர்வாதிகாரத்தை நோக்கி அரசு நகர்கிறது என்ற கோசமும் எழுப்பப்படுகிறது. கைதான சிலர் பிணையில் விடப்பட்டுள்ளனர். கோதபாய உட்பட சிலருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமது பதவிக்காலத்தில் சட்டங்களை நேர்த்தியாக பயன்படுத்தியதாகக் கூறிவரும் சுரேஸ் சாலே தம்மை நிரபராதி எனக் காட்டுவதற்காக உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். மகாத்மா காந்தியும், தியாகி திலீபனும் முன்மாதிரியாக எடுத்துக் காட்டிய உண்ணாவிரதம் இப்போது எங்கே வந்து நிற்கிறது.

சுரேஸ் சாலேயின் உண்ணாவிரதம் தொடர்பாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நியாயமான ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். ‘நீங்கள் குற்றமற்றவர் என்றால் நீதிமன்றம் ஊடாக நிரூபித்துக் காட்டுங்கள். மாறாக உண்ணாவிரதப் போராட்டம் இருப்பதால் பயனில்லை” என்று இவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

தமக்குப் பின்னராக கோதபாய உட்பட பலர் கைதாகினால் அது தம் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்துவிடும் என்ற அச்சம் சுரேஸ் சாலேயிடம் ஏற்பட்டுள்ளது. ராஜபக்சக்களின் முன்னாள் சகபாடிகளான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்ற சிலர் இவ்விடயத்தில் சுரேஸ் சாலேயை உசுப்பேத்தி வருவதையும் அவதானிக்க முடிகிறது.

இந்தச் செய்திகள் அண்மைய நாட்களில் ஊடகங்களை பெருமளவில் ஆக்கிரமித்து வருவதால் தமிழர் தேச அரசியலும்,இங்கு இடம்பெற்ற மனிதப் படுகொலைகள், புதைகுழி உடலங்களும் சர்வதேசப் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டு வருகின்றன.

அரியாலை சித்துப்பாத்தி மயானம் என்று அழைக்கப்படும் செம்மணிப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு ஆரம்பமாகி 23 நாட்களை எய்தி விட்டது. இதுவரை 334 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. போர்க்காலம் என்று கூறப்படும் தமிழின அழிப்புக் காலத்தில் தாயகத்தில் காணாமலாக்கப்பட்ட, கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் இங்கு கொத்துக் கொத்தாக புதைக்கப்பட்டுள்ளது. சிறார்கள், குழந்தைகள், அவர்களின் பாற்போத்தல்கள், விளையாட்டுப் பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

கிரிக்கெட் விளையாட்டில் ஸ்கோர் (ஓட்ட எண்ணிக்கை) அறிவிக்கப்படுவதுபோல இங்கு மீட்கப்படும் உடலங்களதும் என்புக் கூடுகளதும் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு வருகிறது. முள்ளிவாய்;க்காலில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதுடன் ஒப்பிடுகையில் செம்மணியின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இதுபற்றிய செய்திகள்கூட அக்கறை காட்டப்படாதவையாக காணப்படுகின்றன. தினசரி இங்கு மீட்கப்பட்டு வரும் என்புக் கூடுகள் எம்மவர்களுடையது என்ற உணர்வு இன்னமும் எம்மவரிடம் ஏற்படவில்லையென்றே கூறவேண்டும்போல் இருக்கிறது.

இதே உணர்வுடன்தான் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் இப்போது காணப்படுகின்றனர். செம்மணியை இவர்கள் மறந்துவிட்டனர். அண்மையில் இந்தப் பக்கம் அவர்கள் சென்றதாகக்கூட கதையில்லை. தங்கள் உள்வீட்டுப் பிரச்சனையையே தீர்க்க முடியாது ஊடகங்கள் ஊடாக அறிக்கை விட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு செம்மணி பக்கம் போக நேரம் இல்லைப் போலும்.

எதிரியுடன் மோத வேண்டிய இவர்கள் அதனை மறந்து தமிழ்த் தேசியத்துக்குள் இருப்பவர்களுடன் இழுபறிப்படுவதையே காண முடிகிறது. தாங்கள் தனித்துவம் பேணுவதாக கூறிக்கொள்ளும் தமிழரசுக் கட்சி தங்களின் உள்வீட்டு மோதலைத் தான் இவ்வாறு கூறுகிறது போலும்.

யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதி என்றதும் முதலில் நினைவுக்கு வருவது தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகம். இந்தக் கட்டிடத்தில் நன்கு பிரபலமானவர்கள் அமரர் மாவை சேனாதிராஜா, நிர்வாகச் செயலாளராகவிருந்த சேவியர் குலநாயகம், செயற்குழு உறுப்பினரான பி.கனகசபாபதி ஆகியோர். தமிழரசுக் கட்சியையே தங்கள் வாழ்நாளாக கருதி பணியாற்றியவர்கள் இவர்கள். இவர்களைப் பிடிக்காத உள்வீட்டுக்காரர்கள் சிலர் இவர்களை முதியோர் கிளப் உறுப்பினர்கள் என்று நையாண்டி பண்ணுவதுண்டு.

திரு. குலநாயகம் அவர்கள் கடந்த வாரம் ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கை ஒன்று மிகவும் பிரபல்யமானது. கறையான் புற்றெடுக்க கொடிய நாகங்களும் விச யந்துக்களும் குடிகொண்டு சன்னதம் ஆடுகின்ற நிலைபோன்று கட்சியை தள்ளிவிட முடியாதென இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர் கட்சியின் யாழ்.மாவட்ட கிளை தேர்தல் நடத்தப்பட்ட முறைமையை விரிவாக விளக்கியுள்ளார். கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரின் பெயர்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. பதில் செயலாளர் வழமைபோன்று புரிந்து கொள்ள முடியாத பதில் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால் பதில் தலைவர் எதுவுமே தெரியாதவர் போன்று அமைதி காத்து வருகிறார்.

தமிழரசுக் கட்சியின் ஒரேயொரு யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட எம்.பியான சிவஞானம் சிறீதரன் இது தொடர்பாக வெளியிட்டு;ள்ள அறிக்கையில், தமிழரசின் பிரச்சனையை கட்சிக்குள்ளேயே தீர்ப்போம் எனத் தெரிவித்துவிட்டு, திரு. குலநாயகம் அவர்களை கட்சியின் தேசிய பட்டியல் எம்.பியாக நியமிக்க தாம் எடுத்த முயற்சி ஏற்கப்படாத உள்வீட்டு விவகாரத்தை அம்பலமாக்கியுள்ளார்.

தமிழரசக் கட்சியின் வளர்ச்சியும், நீட்சியும் மாட்டுவால்போல் கீழ்நோக்கி வளர்ந்து வெல்லும் நிலையிலும் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்ற குரலில் தமிழரசுக் கட்சி தொடர்ந்து வருகிறது. அப்படியொரு தேர்தல் இப்போது நடத்தப்பட்டால் வடக்கு கிழக்கில் எத்தனை ஆசனங்களை தமிழரசுக் கட்சி பெறுமென்பது அவர்களுக்கு மட்டுமல்ல மற்றைய கட்சிகளுக்கும் தெரியும்.

13ம் திருத்தம், மாகாண சபைத் தேர்தல் என்பவை தமிழர் பிரச்சனைக்கான அப்போதைய தீர்வாக இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் புகுத்தப்பட்டவை. ஆனால் இந்தத் தேர்தலை நடத்துவதில் இலங்கைக்கு மட்டுமன்றி இந்தியாவுக்கும் போதிய அக்கறை காணப்படவில்லை. எனினும், தேர்தல் வேண்டுமென்று தமி;ழரசுக் கட்சியும் மற்றைய தமிழ்த் தேசிய அணிகளும் முனைப்பாக நிற்கின்றன.

மாகாண சபைத் தேர்தலை தாமதமின்றி நடத்த வேண்டுமென வலியுறுத்தும் மக்கள் போராட்டம் ஒன்றை நடத்தும் வலிமை தமிழரின் தலைமைக் கட்சி என்று கூறும் தமிழரசுக் கட்சிக்கு உள்ளதா? அப்படி இருக்குமாயின் அதற்காக மக்களை அணிதிரட்டி களத்தில் காட்ட வேண்டும். இதனைச் செய்யாதவரை மாகாண சபைத் தேர்தல் மக்களுக்கானதா அல்லது அரசியல்வாதிகளுக்கானதா என்ற கேள்வி பதில் காணமுடியாது தொடர்ந்தவாறே இருக்கும்.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp