04:29
வடக்கு மாகாண சபைக்கு உரித்தான இணைந்த சேவையில் குறிப்பிடத்தக்க ஆளணியினரை (வேலைவாய்ப்பை) மாகாண சபை இல்லாத காலப்பகுதியில் இல்லாமல் செய்வதற்கான முயற்சியில் மாகாண நிர்வாக அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் வடக்குமாகாண சபைக்கு உரித்தான 80 க்கு மேற்பட்ட ஆளணியினரை (வேலைவாய்ப்பை) இழக்கவேண்டிய ஆபத்தான நிலை உருவாகியுள்ளது.
2006 ஆம் ஆண்டு இப்பதவிக்கு ஆளணி பதிதாக உருவாக்கப்பட்டு அனுமதிக்கு சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் மாகாண சபை இயங்க ஆரம்பித்த பின் 2013 இல் தொடர் நடவடிக்கைகளின் பயனாக, நா.பத்திநாதன் அவர்கள் பிரதம செயலாளராக இருந்த காலத்தில் 2017 ஆம் ஆண்டு 82 ஆளணிக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,(DEVELOPMENT ASSISTANT) வடக்கு மாகாணசபைக்குட்பட்ட திணைக்களங்களால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைகளை கண்காணித்து அறிக்கையிடுவதற்காக களப்பணிகளுக்கு நியமிக்கப்பட்டனர்.
இந்த நியமனம் காலப்போக்கில் படிப்படியாகக்குறைக்கப்பட்டு தற்போது 20 ஆக குறைக்கப்பட்டு, அவர்கள் பொருத்தமற்ற மத்திய நிர்வாக அலகுகளுடன் தற்போது இணைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் வடக்குமாகாணத்தின் மாவட்டங்களில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாத பல்வேறு நெருக்கடிக்காலங்களில் இவர்களின் பணி பலதரப்பினராலும் பாராட்டப்பட்ட ஒன்று.
தற்போது மத்திய அரசில் கதிரைகளுக்கு பாரமாக இருப்பவர்கள் வடக்கு மாகாண சபை உயர் பதவிகளில் அவர்களது ஓய்வுக்கு முந்தைய காலங்களை களிப்பதற்காக நியமிக்கப்படுவதும், இவ்வாறானவர்கள் மாகாண சபை இயங்காத காலத்தில் தங்கள் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்தும் வருகின்றனர்.
இவர்களது பொறுப்பற்ற நடவடிக்கைகளால் வடக்குமாகாணத்திற்குரிய பலரது தொழில் மூலாதாரத்தை இழக்கவேண்டிய துர்ப்பாக்கியநிலை ஏற்பட்டுள்ளது.
இதற்காக இவர்கள் குறித்த பதவியுடைய உத்தியோகத்தர்களை கீழ்த்தரமாக விமர்சித்து,தரக்குறைவாக நடத்திவருகின்றனர்.
இதுவரை காலமும் வினைத்திறனாக செயற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் குழு ஒன்று இவர்களது காலத்தில் வினைத்திறனற்று போய்விட்டதாக தற்போதுள்ள அதிகாரிகள் புலம்புவதானது, இவர்களது நிர்வாக திறனின்மையையே வெளிப்படுத்துவதாக பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அத்துடன் இந்த கள பணிக்கு எவரும் விரும்பி விண்ணப்பிக்காது வருடாந்திர இடமாற்ற நடைமுறைகளில் ஏழுமாற்றாகவே இந்த நியமனங்கள் இடம்பெறுகின்றன.
இவ்வாறிருக்க, ஏற்கனவே பல திணைக்களங்களில் அலுவலக பணிகளை திறம்பட ஆற்றியவர்கள், அதிகாரிகளாலேயே இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டு அவர்களாலேயே அவமானப்படுத்தப்படுவது மிகக்கேவலமானது எனவும் பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
(வடக்குமாகாண பிரதம செயலாளர், பிரதிப்பிரதம செயலாளர்-திட்டமிடல், பிரதிப்பிரதம செயலாளர்-நிர்வாகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், குறிப்பிட்ட உத்தியோகத்தர்களை கிழ்த்தரமாக விமர்சித்த உரையாடல் இணைக்கப்பட்டுள்ளது)
What’s your Reaction?

