அக்கரைப்பற்று: அக்கரைப்பற்று விஜயராம மகா விகாரையில் 2026ஆம் ஆண்டின் வசா கால நிகழ்வுகளை முன்னிட்டு சிறப்பு பௌத்த பூஜை வழிபாடுகளும் தர்மபோதனையும் நேற்று (23.08.2026) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
ஹிங்குரான பிரிவெனாதிபதி ஸ்ரீ தம்ம ரத்ன தேரர் மற்றும் ஸ்ரீ விஜயராம மகா விகாராதிபதி தேவகொட சோரத்த தேரர் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.
விஜயராம விகாரையில் அமைந்துள்ள போதி மரத்திற்கு சிறப்பு பௌத்த பூஜை மற்றும் வழிபாடுகள் இடம்பெற்றதுடன், வசா கால நிகழ்வின் ஒரு பகுதியாக தர்மபோதனையும் நடத்தப்பட்டது. தர்மபோதனையின் ஊடாக மன அமைதியையும் மகிழ்ச்சியையும் பெற்று, வாழ்க்கைப் பயணத்தை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்லுமாறு பக்தர்களுக்கு ஆசியுரை வழங்கப்பட்டது.
அத்துடன், இவ்வருட கதின பிங்கம உற்சவத்தின் நிறைவு நிகழ்வாக எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் பெரஹரா ஊர்வலம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பொலிஸ் அத்தியட்சகர் தந்த நாராயண, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுனில் திசாநாயக்க, அக்கரைப்பற்று 241ஆவது காலாட்படைப் பிரிவின் அதிகாரி, நிந்தவூர் மற்றும் காரைதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட அரச மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும், அக்கரைப்பற்று, ஹிங்குரான, அம்பாறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெருமளவான பொதுமக்களும் பௌத்த பக்தர்களும் கலந்துகொண்டனர்.
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் நெருக்கமாகவும் நட்புறவுடனும் வாழும் இப்பகுதியில், மத நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிருபர்
செல்வி வினாயகமூர்த்தி

What’s your Reaction?

