கல்வி, உயர்கல்வி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதம மந்திரி தெரிவிப்பு
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் பிரதம மந்திரி திருமதி. ஹரிணி அமரசூரிய தலைமையில் சென்ற வாரம் பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உரையாற்றிய அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இந்த வருடம் ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் 80, ஆங்கில ஆசிரியர்கள் 40, விஞ்ஞான ஆசிரியர்கள் 30, கணித ஆசிரியர்கள் 30 மொத்தமாக 180 ஆசிரியர்கள் பயிற்சிக்காக சேர்க்கப்படவுள்ளனர். இந்த நிலைமையில் அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் வகுப்பறைக் கட்டிடங்கள், ஆராதணை மண்டபம், அதிபர் விடுதி, விளையாட்டு மைதான பார்வையாளர் அரங்கு மற்றும் நீர் விநியோகத் திட்டங்கள் புனரமைப்பதற்கான விசேட நிதியினை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தெரிவித்தார்
இது தொடர்பாக பிரதம மந்திரி அவர்கள் பதிலளிக்கையில், அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் கல்வி, உயர்கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் முதற்கட்டமாக வகுப்பறைக் கட்டிடங்களை திருத்துவதற்கு 18 மில்லியன், அதிபர் விடுதிக்காக 7 மில்லியன், கூட்ட மண்டபத்திற்கு 08 மில்லியன் மொத்தமாக 33 மில்லியன் நிதி முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய தேவைகளையும் கருத்தில் எடுத்து செயற்படுத்தவுள்ளதாகவும் பிரதம மந்திரி திருமதி. ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பிரதமரின் இச்செயற்பாட்டிற்கு பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை நன்றியினை தெரிவித்தார்.

