செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் வேகமாக மாற்றிவரும் உலகுக்கு ஏற்ற அறிவு, திறன்கள் மற்றும் சிந்தனைத் திறனுடன் மாணவர்களைத் தயார்ப்படுத்துவது அவசியம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.
‘‘Future Ready – Small Steps. Big Dreams’’ நூலின் இலங்கை வெளியீட்டு நிகழ்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் ஹூவர் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் இதனைத் தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்,
செயற்கை நுண்ணறிவு மாணவர்களுக்காகச் சிந்திக்கும் மாற்றாக அமைந்துவிடக்கூடாது, மேலும் சிறப்பாகச் சிந்திப்பதற்கு உதவும் கருவியாகவே அதனைப் பயன்படுத்த வேண்டும்
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தெரிந்திருப்பது மாத்திரமன்றி, அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பொறுப்புடனும் நெறிமுறைகளுக்கு அமைவாகவும் பயன்படுத்தும் திறனையும் மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்
வடக்கு மாகாணப் பாடசாலைகளில் தாம் அவதானித்த மாணவர்களின் திறமைகளையும் புத்தாக்கச் சிந்தனைகளையும் பாராட்டுகிறேன். அவர்களுக்குத் தேவையானது சரியான வழிகாட்டலும் தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளுமேயாகும்
மாறிவரும் மாணவர்களின் உலகைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு வழிகாட்டுவதில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்குக் கூட்டுப் பொறுப்பு உள்ளது
அரசாங்கத்தின் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மாணவர்களின் சிந்தனைத் திறன், படைப்பாற்றல், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஆற்றல் மற்றும் வாழ்க்கைத் திறன்களை வளர்ப்பதில் முக்கியத்துவம் அளிப்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர், இத்தகைய வாய்ப்புகள் நகர்ப்புறப் பாடசாலைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், வளங்கள் குறைந்த கிராமப்புறப் பாடசாலை மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என தெரிவித்தார்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடமும், பல்கலைக்கழகத்தின் அறிவு மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்ற அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ;ட பேராசிரியர் தி.வேல்நம்பி, மருத்துவபீடப் பீடாதிபதி பேராசிரியர் க.சுரேந்திரகுமார் மற்றும் நூலாசிரியர் லோகன் நாதன் ஆகியோரும் உரையாற்றினர். ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இந்நூல், மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டியாக அமைந்துள்ளது.
காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/4843887652561645




