இன்று (13.10.2026) தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் குறைந்த அழுத்த பிரதேசம் உருவாகும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இத்தொகுதியின் தாக்கம் காரணமாக, நாட்டையும், நாட்டைச் சுற்றியுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளிலும் இன்று முதல் எதிர்வரும் நாட்களுக்கு மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு மீனவர்கள், கடற்படையினர் மற்றும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ முதல் 150 மி.மீ வரையிலான கனமழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளின் சில இடங்களில் 75 மி.மீ-க்கும் அதிகமான ஓரளவு கனமழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் விபத்துகளைக் குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
What’s your Reaction?

