ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்களுக்கான சந்திப்பானது நேற்றைய தினத்தில் அக்கரைப்பற்று Mango Garden ஹோட்டலில் இடம் பெற்றிருந்தது. இன்நிகழ்வானது ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளருமான வெள்ளையன் வினோகாந்த் அவர்களின் தலைமையில் இடம்பெற்று இருந்தது. இதில் திருக்கோவில், ஆலையடிவேம்பு, காரைதீவு, நாவிதன் வெளி, சம்மாந்துறை போன்ற பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வின் சிறப்பு அதிதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ. ரஞ்சித் மத்தும பண்டார அவர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் இணை தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ. புத்திக பத்திரன அவர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட தலைவரும், தெஹியத்த கண்டிய பிரதேச சபையின் தவிசாளருமான கயான் தர்சன போன்றோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இந்நிகழ்வின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் கிராம மட்டங்களிலான நிர்வாக கட்டமைப்பு, இணைப்பாளர்கள், அமைப்பாளர்களை நியமிக்கும் விடயம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. அதன் போது கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் கௌரவ ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள் குறிப்பிட்டு கூறுகையில் இன்று நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக தங்களுடைய கடமைகளை மிக சிறந்த முறையில் செய்து கொண்டு வரும் ஐக்கிய மக்கள் சக்தியானது எதிர்காலத்தில் ஆட்சி அமைப்பதில் எந்த விதமான ஐயமுமில்லை என்பதுடன் இந்த அரசாங்கத்தின்பால் மக்களுக்கு இருந்த நம்பிக்கை அடியோடு குறைந்து விட்டது எனவும், இந்த அரசாங்கமானது தான் ஆட்சிக்கு வருவதற்கு முன்பதாக கூறிய எதுவிதமான வாக்குறுதிகளையும் நிறைவேற்றியதாக காணக் கூடியதாக இல்லை என்பதனையும் தெளிவாக எடுத்துரைத்திருந்தார்.

