இலங்கைத் தமிழ் மக்களின் அண்மைக்கால வரலாற்றில் ஆறாத வடுவாக நிலைத்துவிட்ட கொடூரச் சம்பவங்களில் செம்மணிப் புதைகுழி விவகாரமும் ஒன்று.
செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மனித என்புக்கூடுகள் ஓர் இனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களின் உச்சக்கட்ட சான்றுகளாக அமைந்துள்ளன.
இலங்கையின் மிக பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி உருவாகியுள்ள போதிலும் தசாப்தங்கள் பல கடந்த நிலையிலும், இக்கொடூரங்களுக்கு காரணமான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நீதி கிடைக்காமலும் காணப்படுகின்றன.
இதனால் பாதிக்கப்பட்ட தரப்பில் பெரும்பாலானவர்கள் தமக்கு சர்வதேச விசாரணையே தேவை என நீண்ட காலமாக கோரி வருகின்றனர்.
ஆனாலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் , காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அதிக கரிசனை கொண்டுள்ளது. அதனால் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் ஊடாக இதுவரையில் செம்மணியில் இடம்பெற்ற மூன்று கட்ட அகழ்வு பணிகளுக்கும் பாரிய நிதியினை ஒதுக்கியுள்ளது.
அந்த வகையில் , செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்று கட்டங்களாக 110 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளுக்காக சுமார் 57.9 மில்லியன் ரூபாய் (5 கோடியே 79,இலட்சத்து 68 ஆயிரம் ரூபாய்) செலவிடப்பட்டுள்ளதாக காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.
செம்மணியில் இதுவரையில் முன்னெக்கப்பட்ட மூன்று கட்ட அகழ்வு பணிகளிலும் 584 என்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் , நான்காம் கட்ட அகழ்வு பணிகளுக்காக 14 நாட்களுக்கான பாதீட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு , சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிராணவனுக்கு நீதிமன்று கட்டளையிட்டுள்ள நிலையில் , பாதீடு சமர்ப்பிக்கப்பட்டதும் , அதனை நீதி அமைச்சுக்கு மன்று , சமர்ப்பித்து , நிதி ஒதுக்கீட்டை கோரவுள்ளது.
செம்மணி அகழ்வு பணிகளை முன்னெடுக்க போதிய நிதியினை ஒதுக்கீடு செய்வதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது என செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட்ட நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்துடன் , செம்மணி புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணைகளை முன்னெடுத்து , குற்றவாளிகளை தண்டிப்போம் என நீதி அமைச்சர் உறுதியும் அளித்துள்ளார்
அதேபோன்று , காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளுக்கு இந்த வருடம் மாத்திரம் சுமார் 300 மில்லியன் நிதியினை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் பிமல் ரட்நாயக்கவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக அரசாங்கம் , செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் , அது தொடர்பிலான விசாரணைகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான விசாரணைகள் , பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும், அவர்களுக்கான இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்ற கரிசனையில் உள்ளது
ஆனாலும் , பாதிக்கப்பட்ட தரப்பில் பெரும்பாலானோர் அரசாங்கத்தின் உள்ளக பொறிமுறைகளில் நம்பிக்கை இழந்தே காணப்படுகின்றனர். கடந்த கால அரசாங்கங்களின் செயற்பாடுகளினால் அவர்கள் அரசாங்கங்களை நம்ப தயாராக இல்லாமல் , தமக்கு சர்வதேச சமூகமே நீதியை பெற்று தரும் , என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் , சர்வதேச விசாரணைகளே தேவை என கோரி வருகின்றனர்.
இவ்வாறான நிலையிலையே கடந்த ஞாயிற்றுக்கிழமை செம்மணி மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என யாழ்ப்பாணத்தில் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
நல்லூர் , கைலாச பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உள்ள ஐ,நா அலுவலகம் அருகில் இருந்து ஆரம்பமான பேரணி கோவில் வீதி ஊடாக நல்லூரை அடைந்து , அங்கிருந்து கிட்டு பூங்காவை பேரணி சென்றடைந்தது. பேரணியின் முடிவில் கிட்டு பூங்காவில் பொது கூட்டமும் நடைபெற்றது.
பேரணியில் மனித என்புகூடுகள் போன்ற ஆடைகளை அணிந்தும் , சர்வதேச விசாரணையை வலியுறுத்திய பாதாகைகளுடனும் , வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களையும் கைகளில் ஏந்தியவாறு , பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.
பேரணி முடிவில் இடம்பெற்ற பொது கூட்டத்தில் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் “தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு உள்ளக விசாரணைப் பொறிமுறையை முற்றாக நிராகரிப்பதுடன், சுயாதீனமான, பாரபட்சமற்ற சர்வதேச குற்றவியல் விசாரணை உடனடியாக ஆரம்பிக்கப்படல் வேண்டும் ” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று , பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் , கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , “செம்மணி மனித புதைகுழி சாட்சியங்கள் , சான்று பொருட்கள் , என்பு கூடுகள் என்பவற்றை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து உடனடியாக வெளியே எடுக்கப்பட்டு ஐநாவினுடைய கட்டுப்பாட்டிலே வழங்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்.
இந்த அரசின் கட்டுப்பாட்டிலே உள்ள செம்மணி மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட , மனித என்புக்கூடுகள் , சான்று பொருட்கள் , கொடுக்கப்பட்ட சாட்சியங்கள் அனைத்தும் அழிக்கப்படுவதற்குத்தான் சாத்தியம் காணப்படுகிறது.
எனவே இந்த சாட்சியங்களைப் பாதுகாத்து, சர்வதேச விசாரணையின் ஊடாக இந்த சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
அதனால் , வெறுமனே , அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடுகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நீண்டகால சந்தேகங்களையும் வடுக்களையும் போக்கிவிடாது, உண்மைகள் மறைக்கப்படாமல், சாட்சியங்கள் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.
எனவே நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் அகழ்வுப் பணிகளும் சான்று பொருட்களின் பாதுகாப்பும் உள்ள நிலையில், மக்கள் பிரதிநிதிகள் எழுப்பும் இத்தகைய சந்தேகங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படக் கூடியவை அல்ல. கடந்த கால அரசாங்கங்களின் செயற்பாடுகளும் அவற்றுக்கு காரணமாகவுள்ளன.
எனவே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான விரிவான வெளிப்படைத்தன்மையான விசாரணைகளே இத்தகைய சந்தேகங்களைப் போக்கி, செம்மணிப் புதைகுழி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உண்மையான நீதியைப் பெற்றுத் தரும்.

