பூநகரி முன்பள்ளி மாணவர்களுக்கான கால்கோள் நிகழ்வும் கௌரவிப்பு விழாவும் அண்மையில் (25.05.2026)பூநகரி முன்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.
இதன்போது உரையாற்றிய அவர், “கல்வி என்னும் உன்னத பயணத்தின் முதல் அடியை எடுத்து வைக்கும் இந்த மழலைகள்தான் நம் தேசத்தின் எதிர்காலத் தூண்கள். நாம் இவர்களுக்கு வழங்கும் முறையான கல்வியும் நல்லொழுக்கமுமே, இவர்களை பட்டதாரிகளாக மாத்திரமன்றி, எதிர்காலத்தில் நம் சமூகத்தை நேரிய வழியில் வழிநடத்தும் சிறந்த தலைமைகளாக உருவாக்கும். அந்த உன்னதமான தலைமைத்துவப் பண்பிற்கான விதையை விதைக்கும் முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்களின் அர்ப்பணிப்பு மிக்க பணிக்கு எனது நன்றிகள்” எனத் தெரிவித்தார்.
பூநகரி முன்பள்ளியின் ஆசிரியை திருமதி சுமதன் நிக்ஷனா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக பூநகரி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சிவகுமார் சிறீரஞ்சன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக பூநகரி பிரதேச சபையின் ஞானிமடம் வட்டார கௌரவ உறுப்பினர் திருநாவுக்கரசு சுப்பிரமணியம், குடும்பநல உத்தியோகத்தர் திருமதி சிவநேசன் குகனேஸ்வரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.


