மே. 18 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17ம்
ஆண்டு நினைவேந்தலை அனுஸ்டிக்கும் முகமாக 2009 இறுதி யுத்தத்தின் போது தமிழ்
மக்கள் கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்டதன்
நினைவாகவும், குறித்த காலத்தில் தமிழ் மக்கள் பட்ட வேதனைகளை உணரும் விதமாகவும், போர் வலயத்தில்
அவர்கள் இன்னுயிரைக் காக்க அருந்திய உப்பில்லாக் கஞ்சியினை நினைவு படுத்தும் முகமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் உணர்வுபூர்வமாக மே 12 தொடக்கம் 18 வரையான காலப்பகுதியில் அனுஸ்டிக்கப்படுகின்றது.
அதன் ஆரம்ப நாளான இன்று தாயக செயலணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுத் தூபியில் குறித்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிரதி முதல்வர் வை.தினேஸ், மாநகரசபை உறுப்பினர்களான வைத்தியர் கருணாகரன், ஜனகன், சண்முகலிங்கம், தாயக செயலணி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது முள்ளிவாய்க்கால் நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டதுடன், சத்துருக்கொண்டான் படுகொலை உள்ளிட்ட இறுதி யுத்தத்திலும் கொல்லப்பட்ட உறவுகளை நினைந்து ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் கஞ்சி அனைவருக்கும் பகிரப்பட்டது.
தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி
வாரம் 2026.05.12ம் திகதி தொடக்கம் 2026.05.18ம் திகதி வரை தாயக செயலணியின்
ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு தாயகப் பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில்,
12.05.2026 – கொக்குவில் சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுத் தூபி.
13.05.2026 – கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவு படுகொலை நினைவுத் தூபி.
14.05.2026 – வந்தாறுமூலை உழவர் சந்தி.
15.05.2026 – கிரான் சந்தி.
16.05.2026 – புல்லுமலை.
16.05.2026 – தாண்டியடி, வவுணதீவு.
17.05.2026 – புதுக்குடிருப்புப் படுகொலை நினைவுத் தூபி.
18.05.2026 – குடும்பிமலை.
போன்ற இடங்களிலும் அனுஸ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது


