மக்களைப் பொதுப் போக்குவரத்துச் சேவையை நோக்கி ஈர்ப்பதில் மெட்ரோ நகர்ப்புற ஆடம்பரப் பேருந்துச் சேவை போன்ற திட்டங்கள் முக்கிய பங்காற்றுகிறது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாண நகரில் மெட்ரோ பேருந்துகளை இயக்குவதற்கு விசேட வீதி ஆய்வும் பரீட்சார்த்த ஓட்டமும் நேற்றைய தினம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பில் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் மெட்ரோ பேருந்துச் சேவைக்கு மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் யுவதிகள் மத்தியில், சிறந்த வரவேற்புக் கிடைத்துள்ளது
தனியார் வாகனங்களில் தமது பணியிடங்களுக்குச் சென்று வந்த பலர், தற்போது தமது வாகனங்களைப் பேருந்து நிலையங்களுக்கு அருகிலுள்ள வாகனத் தரிப்பிடங்களில் நிறுத்திவிட்டு, மெட்ரோ பேருந்துகளைப் பயன்படுத்தும் புதிய போக்குவரத்துக் கலாசாரமொன்று கொழும்பில் உருவாகி வருகிறது.
உலகளாவிய ரீதியில் நகர்ப்புற போக்குவரத்து நெரிசல் பாரிய சவாலாக உள்ள நிலையில், தனியார் வாகனப் பயன்பாட்டைக் குறைத்து, மக்களைப் பொதுப் போக்குவரத்துச் சேவையை நோக்கி ஈர்ப்பதில் இத்தகைய திட்டங்கள் முக்கிய பங்காற்றுகிறது
கொழும்பில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இச்சேவையை, 2029 ஆம் ஆண்டு வரையிலான தேசிய விரிவாக்கத் திட்டத்தின் அடுத்த கட்டமாக யாழ்ப்பாணம் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை வடக்கு மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்
மக்கள் தொகை மற்றும் நகர்ப்புறப் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள பல மாவட்டங்கள் காணப்படுகின்ற போதிலும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் இத்திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளமைக்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன ஆகியோருக்கு நன்றிகளை தெரிவிக்கிறோம்
யாழ்ப்பாணத்திற்கான மெட்ரோ பேருந்துச் சேவையை எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஆரம்பிப்பதை இலக்காகக் கொண்டு, தேவையான முன் ஆயத்தப் பணிகளைத் துரிதப்படுத்தவுள்ளோம் என தெரிவித்தார்.

What’s your Reaction?

