உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கீரிமலையில் தரம்பிரிக்காத குப்பைகள் கொட்டப்பட்டமையை கண்டிக்கின்றோம்..!

keemalai waste dumping | Pathivu News

யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட கீரிமலை மற்றும் மாவிட்டபுரம் பகுதிகளில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்களுக்கு அருகில் சுண்ணக்கல் அகழப்பட்ட குழிகளுக்குள், வலிகாமம் தெற்கு பிரதேச சபையினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவந்த சட்டவிரோத மற்றும் முறையற்ற கழிவு அகற்றும் செயற்பாடுகளை ‘இயற்கையின் நண்பர்கள் இயக்கம்’ வன்மையாகக் கண்டிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கண்டன அறிக்கையில்;

எமது மக்களின் சுகாதாரத்தையும், எதிர்கால சந்ததியினருக்கான சுற்றுப்புறச் சூழலையும் கேள்விக்குறியாக்கும் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டியது சம்மந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரதும் தார்மீகப் பொறுப்பாகும்.

முறையான கழிவு முகாமைத்துவக் கொள்கைகள் எதனையும் பின்பற்றாது குப்பைகளை இரகசியமான முறையில் கொட்டப்படுகின்றது. சாதாரண வீட்டுக் கழிவுகள் மட்டுமன்றி, இலத்திரனியல் கழிவுகள் (E-waste), மருத்துவக் கழிவுகள், மக்காத நெகிழிப் பொருட்கள் மற்றும் இறைச்சிக் கழிவுகள் எனச் சகல விதமான நச்சுப் பொருட்களும் எவ்வித தரம் பிரிப்பும் இன்றி இங்கு கொட்டப்பட்டுள்ள செயற்பாடு மன்னிக்க முடியாத குற்றமாகும்.

இவ்வாறு கொட்டப்பட்ட கழிவுகளை இரகசியமாக எரியூட்டுவதால் உருவாகும் நச்சுப் புகை அப்பகுதி மக்களின் சுவாசத்தைப் பாதிக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, யாழ்ப்பாணத்தின் உயிர்நாடியான நிலத்தடிநீர் இவ்வாறான நச்சுக்கழிவுகளால் நிரந்தரமாக மாசுபடும் அதியுயர் அபாயம் காணப்படுகிறது.

அதுமட்டுமல்ல கீரிமலை நகுலேஸ்வரம் மற்றும் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் போன்ற வரலாற்றுப் பெருமை வாய்ந்த ஆன்மீகத் தலங்களுக்கு அருகாமையில் இவ்வாறான குப்பைகள் குவிக்கப்படுவது அப்பகுதியின் புனிதத்தன்மையைக் கடுமையாகப் பாதிக்கின்றது.

வலிகாமம் தெற்கு பிரதேச சபையானது தனது எல்லைக்குள் சேரும் குப்பைகளை அகற்றுவதற்கு உரிய மாற்று வழிகளைக் கண்டறியாமல், அடுத்த சபையின் எல்லைக்குள் அத்துமீறியுள்ள இச்செயற்பாடானது சபையின் மாதாந்தக் கூட்டங்களில் எந்தவித உத்தியோகபூர்வ தீர்மானங்களோ அல்லது பகிரங்க விலைமனுக் கோரல்கள், ஒப்பந்தங்கள் எதுவும் இன்றி இரகசியமாக முன்னெடுக்கப்பட்டதா? என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது.

முறையான அரச ஒப்பந்தங்கள் ஏதுமின்றி, இலங்கை கடற்படையினரின் கனரக வாகனங்கள் மற்றும் ஆளணியினரைப் பயன்படுத்தி, ஏற்கனவே கொட்டப்பட்ட குப்பைகளை மூடிமறைக்க முற்பட்டமை பலத்த ஐயத்தை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக இந்த திட்டத்துக்கு பயன்படுத்தப்பட்ட நிதி எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறித்த வெளிப்படைத்தன்மை உள்ளதா?.

வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் நேரில் சென்று தடுத்து, நுழைவாயிலைப் பூட்டிய பின்னரும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தமை அப்பட்டமான அதிகார அத்துமீறலாகும்.

இந்தச் சுற்றாடல் பயங்கரவாதத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர, அரச உயர்மட்ட அமைப்புகள் மற்றும் துறைசார் அதிகாரிகள் தாமதமின்றிப் பொறுப்புக் கூறலையும் சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என இயற்கையின் நண்பர்கள் இயக்கம் வலியுறுத்துகிறது.

இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, இரு உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள இந்த நிர்வாகச் சீர்கேட்டை முடிவுக்குக் கொண்டுவர வடமாகாண ஆளுநர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அத்துமீறிச் செயற்பட்ட அதிகாரிகள் மீது சுயாதீன விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்.

சபைத் தீர்மானங்கள், முறையான கேள்வி கோரல் இன்றி அரச நிதியையோ அல்லது முறைசாரா நிதியையோ பயன்படுத்திப் அருகில் உள்ள சபை எல்லைக்குள் குப்பைகளைக் கொட்டிய வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் நிர்வாகச் செயற்பாடுகள் குறித்து வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் உடனடியாகத் தணிக்கை மற்றும் ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

கள ஆய்வுகளைத் துரிதப்படுத்தி, சுற்றாடல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், குப்பைகளைக் கொட்டியவர்களே அதனைத் தமது சொந்தச் செலவில் மீள அப்புறப்படுத்த வேண்டும்.அதேநேரம் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மத்திய சுற்றாடல் அதிகார சபை எடுக்க வேண்டும்.

குறித்த சுண்ணக்கல் குழிகள் அமைந்துள்ள பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்து, குப்பைகள் ஏற்றி வரும் வாகனங்கள் உட்பிரவேசிப்பதை நிரந்தரமாகத் தடுப்பதற்கான வேலிகள் மற்றும் காவல் அரண்களை அமைப்பதற்கான துரித நடவடிக்கைகளை தெல்லிப்பழை பிரதேச செயலகம் எடுக்கவேண்டும்.

இயற்கையையும், மக்களின் வாழ்விடத்தையும் அழித்து முன்னெடுக்கப்படும் இவ்விதமான மறைமுக நடவடிக்கைகளை இயற்கையின் நண்பர்கள் இயக்கம் வன்மையாக கண்டிப்பதுடன்.
இதன் ஒரு பகுதியாக 12.08.2026 அன்று மக்கள் செயல் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழிப்புணர்வு போராட்டத்திற்கு இயற்கையின் நண்பர்கள் இயக்கம் தனது பூரண ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.என மேலும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp