காரைதீவு விபுலானந்தா மொன்டிசோரி பாடசாலை மாணவர்களின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு, மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் மேயர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நேற்று முன்தினம் (04.10.2026) மட்டக்களப்பு பொது நூலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
காரைதீவில் இருந்து இதற்கென விபுலானந்தா மொன்டிசோரி மாணவர்கள் , பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா ஒழுங்கமைப்பில் விசேட பேரூந்தில் மட்.பொது நூலகத்திற்கு சென்றிருந்தார்கள்.
அங்கு அவர்களுக்கு விசேட வரவேற்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினரும், நூலகக் குழுத் தலைவருமான துரைசிங்கம் மதன் கலந்து சிறப்பித்திருந்தார்.
அத்துடன், மாநகர சபையின் உறுப்பினர்களான சரவணமுத்து பிறேமானந்தன், கருணாநிதி ஜனகன் ஆகியோரும், மட்டக்களப்பு மாநகர சபையின் மாநகர ஆணையாளர் நாகராஜா தனஞ்ஜெயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாணவர்களுக்கு பூரண விளக்கமளித்தனர்.
சிறுவர்களுக்கான விசேட பிரிவில் மொன்டிசோரி மாணவர்கள் குதூகலமாக வாசிப்பதிலும் விளையாடுவதிலும் ஒருமணி நேரம் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டனர்.
பின்னர் மாநகர சபை மேயர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் சிறுவர் தின பரிசளிப்பு விழா இடம் பெற்றது.
விழாவில் மொண்டிசோரி பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா, மாநகர ஆணையாளர் என் .தனஞ்செயன், நூலக பொறுப்பு உறுப்பினர் ரி.மதன் ஆகியோர் உரையாற்றினர்.
சிறுவர் தின நிகழ்வில் பங்கேற்ற சிறுவர்களை மகிழ்விக்கும் வகையில், மட்டக்களப்பு மாநகர சபையின் சார்பில் அன்பளிப்புப் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
விபுலானந்தா மொன்டிசூரி அமைப்பின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சிறுவர் தின நிகழ்வின் முக்கிய அம்சமாக, மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு ஒரு தொகுதி புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.
இவ்வன்பளிப்பு நூலகத்தின் புத்தக வளத்தை மேலும் மேம்படுத்துவதற்கும், சிறுவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்கும் பயனுள்ளதாக அமையும் என மேயர் சிவம் தெரிவித்தார்.
சிறுவர்களின் கல்வி, வாசிப்பு மற்றும் ஆளுமை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு, சிறுவர்களுக்கு மகிழ்ச்சியையும் பயனுள்ள அனுபவத்தையும் வழங்கும் சிறப்பான நிகழ்வாக அமைந்தது.
நிருபர்
வி.ரி. சகாதேவராஜா


