எதிர்வரும் 2026.06.20,21 (சனி, ஞாயிறு) ஆகிய தினங்களில் கிழக்கு மாகாண பிரீமியர் லீக் கிரிக்கட் சுற்றுப்போட்டி பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் மிகக் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாண ஆயுர்வேத திணைக்களத்தின் கீழுள்ள திருகோணமலை, மட்டகளப்பு, அம்பாரை மற்றும் கல்முனை ஆகிய பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் பிரீமியர் லீக் போட்டிகள் இடம்பெறவுள்ளது.
குறித்த பிரீமியர் லீக் போட்டிக்கு பிரதம அதிதியாக சுதேச மருத்துவத்துறை மாகாண ஆணையாளர் எம்.ஏ.நபீல் கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன், விசேட அதிதிகளாக நன்கொடையாளர்கள் கலந்துகொள்ளவுள்தாக பிரீமியர் லீக் போட்டியின் இணைப்பாளரும் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான டொக்டர் ஐ. எல். அப்துல் ஹை தெரிவித்தார்.
ஒவ்வொரு வருடமும் இடம்பெறும் கிழக்கு மாகாண பிரீமியர் லீக் போட்டியானது கடந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றதாகவும், இம்முறை அம்பாரை மாவட்டத்தில் இடம்பெறுவதாகவும் டொக்டர் அப்துல் ஹை தெரிவித்தார்.
மிகவும் சுவாரஸ்யமாக இடம்பெறவுள்ள இப் பிரீமியர் லீக் சுற்றுத் தொடரை கிரிக்கட் ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கண்டுகளிக்க ஆவலுடன் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
நிருபர்
கே எ ஹமிட்

