பூநகரி பிரதேச சபையின் வாடியடி நகரிற்கான மூலோபாய நகரத் திட்டம் நேற்றைய தினம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதற்கான மூலோபாய திட்ட அறிவித்தல் காட்சிப்பலகையினை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் திறந்து வைத்தார்.
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பங்களிப்புடன் வகுக்கப்பட்ட உத்தேச வாடியடி நவீன சந்தைக் கட்டடத் தொகுதியின், கீழ் தளத்தில் பல்பொருள் அங்காடிகள் மற்றும் கடைத்தொகுதிகளும், முதலாம் தளத்தில் கலாசார மண்டபம் மற்றும் திருமண மண்டபமும், இரண்டாம் தளத்தில் திறந்தவெளி திரையரங்கு மற்றும் நவீன உணவகங்களுக்கான திட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நீண்ட போரின் காரணமாகப் பாரிய இடப்பெயர்வையும் அழிவையும் சந்தித்துள்ள பூநகரியின் வாடியடிப் பகுதி, தற்போது கௌதாரிமுனை சுற்றுலா மையம் மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தித் திட்டங்களில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாறியுள்ளது. அவ்வகையில், பெருமளவிலான முதலீட்டாளர்கள் சுற்றுலாத்துறை சார்ந்து முதலீடு செய்யும் மையமாக பூநகரி வாடியடி பரிணமித்துள்ள நிலையில், இந்நகரிற்கான மூலோபாய நகரத் திட்டம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ சிவகுமாரன் சிறீரஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு. பரமானந்தன் சத்தியராகவன், கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு. மாணிக்கராசா முரளி, பூநகரி பிரதேச சபையின் செயலாளர் திரு. இரத்தினம் தயாபரன், பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள் மற்றும் பூநகரி பிரதேச சபை உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

What’s your Reaction?

