உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

2030ஆம் ஆண்டில் நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் இலக்குகளை வெளியிட்ட பிரதமர்..!

prime minister unveils digital economy targets for 2030 | Pathivu News
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், புத்தாக்கங்களையும் உருவாக்கும் நாடாக இலங்கையை உருமாற்றுவதற்கு அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டின் இலங்கைப் பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சிமாநாட்டின் 26 ஆவது கூட்டத்தொடரில் நேற்றைய தினம் (13) கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2026 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் மொத்த ஏற்றுமதி 9 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“டிஜிட்டல் யுகத்தில் தேசத்தைக் கட்டியெழுப்புதல்” என்ற தலைப்பிலான அமர்வில் உரையாற்றிய பிரதமர், இலங்கையைத் தொழில்நுட்பத்தை நுகரும் நாடு என்ற நிலையிலிருந்து புத்தாக்கங்களை உருவாக்கும் நாடாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்.
2030 ஆம் ஆண்டளவில் டிஜிட்டல் பொருளாதாரத்தை 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாக விரிவுபடுத்துதல், டிஜிட்டல் ஏற்றுமதியை 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்தல் மற்றும் 200,000 தொழில்வல்லுநர்களைக் கொண்ட டிஜிட்டல் தொழிற்படையை உருவாக்குதல் ஆகியவை இதன் இலக்குகளாகும்.
அரச நிறுவனங்களை நவீனமயப்படுத்துவதிலும் பொதுச் சேவை வழங்கலை மேம்படுத்துவதிலும் டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கீழ் நிறுவப்பட்டுள்ள நிறுவனக் கட்டமைப்பின் ஊடாக, அடிப்படை டிஜிட்டல் மாற்ற முயற்சிகளுக்காக அரசாங்கம் சுமார் ரூபா 30 பில்லியனை ஒதுக்குவதற்கு உறுதியளித்துள்ளது.
300 இற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளதுடன், ரூபா 6 பில்லியனுக்கும் அதிகமான கொடுப்பனவுகளைச் செயலாக்கியுள்ள GovPay தளத்தை அவர் ஓர் உதாரணமாகக் குறிப்பிட்டார். டிஜிட்டல் தளங்கள் எவ்வாறு அரசாங்கப் பரிவர்த்தனைகளை எளிமைப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும், பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நிர்வாகச் சுமைகளைக் குறைக்கவும் முடியும் என்பதை இது எடுத்துக்காட்டுவதாக அவர் தெரிவித்தார்.
சுகாதாரம், விவசாயம், எரிசக்தி மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பொருளாதாரத்தின் முக்கிய துறைகளை மாற்றியமைப்பதில் டிஜிட்டல் தொழில்நுட்பம் வகிக்கும் பங்கையும் பிரதமர் விளக்கினார்.
டிஜிட்டல் சுகாதார முறைமைகள் மற்றும் தொலைமருத்துவம் (telemedicine) மூலம் சுகாதார சேவைகளைப் பெறுவதற்கான அணுகலை மேம்படுத்துதல், தரவுகளை அடிப்படையாகக் கொண்ட விவசாய நடைமுறைகள் மூலம் உற்பத்தித்திறனையும் நீர் முகாமைத்துவத்தையும் வலுப்படுத்துதல், அத்துடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கிய மாற்றத்திற்கு ஆதரவளிப்பதற்காக நுண்ணறிவுக் கட்டமைப்புகளையும் டிஜிட்டல் எரிசக்தி முகாமைத்துவ முறைமைகளையும் பயன்படுத்துதல் ஆகியவற்றின் சாத்தியக்கூறுகளை அவர் எடுத்துரைத்தார்.
மேலும், டிஜிட்டல் பயணச்சீட்டு முறைமைகள், நிகழ்நேர வாகனத் தொகுதிக் கண்காணிப்பு மற்றும் நுண்ணறிவுப் போக்குவரத்து முகாமைத்துவம் ஆகியவை போக்குவரத்துத் திறனை மேம்படுத்துவதுடன், பயணிகள் அன்றாடம் எதிர்கொள்ளும் சிரமங்களையும் குறைக்கக்கூடும் என அவர் குறிப்பிட்டார்.
தொழில்வாய்ப்பைப் பெறுவதற்கும் தொழில்சார் முன்னேற்றத்தை அடைவதற்கும் தொழிற்துறை மற்றும் தொழில்நுட்பக் கல்வி சமமான பெறுமதியுடைய பாதையாக அங்கீகரிக்கப்பட வேண்டும் எனப் பிரதமர் வலியுறுத்தினார்.
மாறிவரும் தொழிலாளர் சந்தையின் தேவைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், கல்வி நிறுவனங்களுக்கும் தொழிற்துறைக்கும் இடையிலான கூட்டாண்மைகளை வலுப்படுத்துதல், நடைமுறைப் பயிற்சிக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் நுண் திறன் சான்றிதழ்கள் (Micro-credentials) உள்ளிட்ட நெகிழ்வான தகைமைகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.
தொழில்நுட்பத்தால் மாத்திரம் சமத்துவமின்மையை ஒழிக்க முடியாது என்றும், டிஜிட்டல் கொள்கைகள் குடிமக்களை மையமாகக் கொண்டவையாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
டிஜிட்டல் மாற்றத்தின் வெற்றியானது உருவாக்கப்பட்ட தளங்களின் எண்ணிக்கையால் மாத்திரம் அளவிடப்படக் கூடாது என்றும், மாறாக, பொதுச் சேவைகள், வணிக நடவடிக்கைகள் மற்றும் அன்றாட வாழ்க்கை ஆகியவை அனைத்து குடிமக்களுக்கும் அதிக அணுகலுடனும் வினைத்திறனுடனும் வசதியாகவும் மாறியுள்ளனவா என்பதன் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற குழுக் கலந்துரையாடலில் பங்கேற்ற பிரதமர், கல்வித்துறையை மாற்றியமைப்பதற்குத் தொழில்நுட்பம் கணிசமான வாய்ப்புகளை வழங்கினாலும், ஏற்கனவே நிலவும் ஏற்றத்தாழ்வுகள் மேலும் அதிகரிக்காமல் இருப்பதையும், அனைத்து மாணவர்களும் இவ்வாய்ப்புகளைச் சமமாகப் பெற்றுக்கொள்வதையும் உறுதிப்படுத்தும் வகையில் இச்செயற்பாடு கவனமாக முகாமைப்படுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் உட்கட்டமைப்பில் முதலீடு செய்தல், தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட கல்விக்கான அணுகலை விரிவுபடுத்துதல் மற்றும் மாறிவரும் உலகளாவிய தேவைகளுக்குப் பதிலளிக்கும் நவீன பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பிரதமர் வலியுறுத்தினார்.
கல்வியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஏனைய வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பது தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார். குறிப்பாக, விமர்சனச் சிந்தனை, பகுத்தறிதல் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி ஆகியவற்றில் அவை ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் அணுகலில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்டுவரும் முயற்சிகளைக் குறிப்பிட்ட பிரதமர், கல்வி முறைமை முழுவதிலும் டிஜிட்டல் தயார்நிலையை வலுப்படுத்துவதற்கும், தொழில்நுட்ப முன்னேற்றங்களின் நன்மைகளைப் பெறுவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அதிகளவிலான பாடசாலைகளில் ஏற்படுத்துவதற்கும், டிஜிட்டல் பொருளாதார அமைச்சுடன் இணைந்து ஐந்தாண்டுத் திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கல்வியை மாற்றியமைப்பதையும் எதிர்காலத்திற்கான தொழிற்படையைத் தயார்ப்படுத்துவதையும் அரசாங்கத்தினால் மாத்திரம் சாதிக்க முடியாது என்றும் பிரதமர் மேலும் வலியுறுத்தினார்.
அரசாங்கம், தனியார் துறை மற்றும் தொழிற்துறை ஆகியவற்றுக்கு இடையிலான வலுவான ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுத்த அவர், தொழிற்துறைப் பயிற்சிக்கான நியமனங்கள், தொழிற்பயிற்சி நிறுவனங்களுடனான கூட்டாண்மைகள் மற்றும் உண்மையான தொழிலாளர் சந்தைத் தேவைகளைப் பிரதிபலிக்கும் நிகழ்ச்சித்திட்டங்களை உருவாக்குதல் ஆகியவற்றின் ஊடாகத் தொழிற்துறை மற்றும் தொழில்நுட்பக் கல்விக்கு ஆதரவளிக்குமாறு வணிக நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டார்.

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊