எவர் என்ன சொன்னாலும்,என்ன செய்தாலும், எங்கு கூக்குரல் இட்டாலும், ஆர்ப்பாட்டங்களை செய்தாலும், குற்றமிழைத்தவர்கள் அனைவரும் சிறை செல்வது உறுதி என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர் , ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் சட்டம் என்பது அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்.அந்த வகையில், இலங்கையில் சட்டத்தின் படியான ஆட்சியே நடைபெறுகிறது.
கடந்த காலத்திலே ஊழல் செய்தவர்கள், கடந்த காலத்திலே ஜனநாயகத்திற்கு எதிரான செயல்பட்டவர்கள், மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள், லஞ்சம் வாங்கியவர்களுக்கு எதிராக சட்டம் தன் கடமையை செய்கின்ற பொழுது, நாளுக்கு நாள் கைது செய்யப்படுகின்றனர்.
அவ்வாறு கைது செய்கின்ற பொழுது ஒரு சிலர் பயமடைந்திருக்கிறார்கள். அவர்கள் கலக்கம் அடைந்திருக்கிறார்கள்.
இன்று எதிர்கட்சியிலே இருக்கின்ற அநேகமானவர்கள் கடந்த கால ஆட்சியிலே ஊழல் செய்தவர்கள். எனவே அவர்களுக்கு தெரியும் அடுத்தடுத்து என்ன நடக்கப் போகின்றது
அதனால், இந்த ஆட்சியை குழப்புவதற்காக சிறிய சிறிய குழுக்களை அமைத்துக் கொண்டு சில ஆர்ப்பாட்டங்களை செய்கிறார்கள். பாராளுமன்றத்திலே கூக்குரல் இடுகிறார்கள்.
இந்த அரசாங்கம் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுகின்றது, சர்வாதிகாரமாக செயல்படுகின்றது என ஒரு கருத்தை முன்வைக்கிறார்கள். ஆனால், இந்த நாட்டு மக்களுக்கு தெரியும் கடந்த காலத்தில் யார் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டார்கள் என்று.
இந்த நாட்டில் ஏற்பட்ட இன வன்முறை, இன கலவரங்கள், பத்திரிகையாளர்கள் சுட்டுக்கொள்ளப்பட்டது, பத்திரிகையாளர்கள் கடத்தப்பட்டது, ஊடக நிறுவனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டது, அதேபோல அரசாங்கத்திற்கு எதிராக போராடிய மக்கள் சுட்டு வீழ்த்தப்பட்டார்கள், இவ்வாறான வரலாற்றைக் கொண்டவர்கள் தான் இந்த அரசாங்கத்தின் மீது சேறு பூசுகிறார்கள்.
நாங்கள் மீண்டும் சொல்கின்றோம், யார் என்ன சொன்னாலும், யார் என்ன செய்தாலும், எங்கு கூக்குரல் இட்டாலும், என்ன ஆர்ப்பாட்டங்களை செய்தாலும், இந்த அரசாங்கம் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளில் இருந்து ஒருபோதும் நாங்கள் பின்வாங்க மாட்டோம், ஏனெனில் நீதித்துறை தன் கடமையை சரியாக செய்து கொண்டு போகிறது.
இந்த நாட்டிலே யார் யார் தவறு இழைத்தார்களோ, குற்றம் இழைத்தார்களோ அவர்களுக்கெல்லாம் சட்டம் தன் கடமையை செய்யும்,
எனவே அவர்கள் சிறை செல்வது உறுதி. அதனால், அவர்களுடைய எதிர்ப்பையோ அவர்களுடைய பேச்சுகளுக்கோ நாங்கள் அவ்வளவாக கணக்கில் எடுப்பதில்லை,
நாட்டு மக்களுடைய முன்னேற்றத்திலும் நாட்டு முன்னேற்றத்திலும், எங்களுடைய முழு நேரத்தையும் நாங்கள் செலவிட்டு கொண்டிருக்கிறோம்.
What’s your Reaction?

