முன்னாள் முதற் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவில், சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
இது தொடர்பான அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘சிரிலிய சவிய’ (Siriliya Saviya) கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேட்டுக் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, இன்று (13.10.2026) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, ஷிராந்தி ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை.
சந்தேக நபருக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, ஷிராந்தி ராஜபக்ஷ நேற்றைய தினம் (12.10.2026) சிறைச்சாலையில் இருந்தபோது திடீர் மாரடைப்புக்குள்ளானதன் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
அத்துடன், அவர் தற்போது திறந்த இதய சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதன்போது, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவிக்கையில், சந்தேக நபர் நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது உண்மைதான் என்றாலும், அவரை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்துவது தொடர்பில் எந்தவொரு தகவலும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனையடுத்து, பகிரங்க நீதிமன்றத்தில் சிறைச்சாலை அதிகாரிகளை அழைத்து பிரதான நீதவான், ஷிராந்தி ராஜபக்ஷ இன்றைய தினம் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறாரா என்பது குறித்த விபரங்களை உடனடியாக விசாரித்து தமக்கு அறிவிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சம்பந்தப்பட்ட அறிக்கை கிடைக்கும் வரை வழக்கு இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?

